விஜய்யின் புதிய உத்தரவு – தமிழ்த் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கடுத்தகட்டப் படப்பிடிப்பு மே முதல்வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கவிருக்கிறதாம். அங்கே ஒரு பெரிய அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள். அங்கேயே மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அஜீத்தின் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பும் அங்கேதான் நடந்துவருகிறது.
இப்படி தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரண்டு நடிகர்களும் ஐதராபாத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்துவதால் பெரும்பாலான தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர் என்கிற குமுறல்கள் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில், தன்னுடைய படக்குழுவினருக்கு விஜய் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
அது என்னவெனில்?
இப்போது ஐதராபாத்தில் அமைக்கப்படும் வீடு போன்ற அரங்கில் சுமார் இருபது முதல் இருபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு இருக்குமாம். அது முடிந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மொத்தத்தையும் சென்னையிலேயே நடத்திவிடலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.
இது தமிழ்த் தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











