போயஸ்கார்டனில் நயன்தாரா – அடுத்து அதுதானா?
சென்னையில் போயஸ்கார்டன் எல்லோருக்கும் தெரிந்த பகுதி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் அங்கே இருக்கின்றன என்பதால் அது அனைவராலும் அறியப்படும் பகுதியாக இருக்கிறது.
சென்னையில் வசிக்கும் செல்வந்தர்கள் எல்லாம் போயஸ்கார்டன் பகுதியில் ஒருவீடு வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்வார்கள்.
ரஜினியின் மருமகனான தனுஷுக்கும் அந்த ஆசை வந்து அங்கே ஒரு பெரியவீட்டைக் கட்டிவிட்டார்.அதுவே ஒரு சர்ச்சையாகி,அதற்கு,ஏன் நானெல்லாம் போயஸ்கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? என்று வெளிப்படையாகவே பேசினார் தனுஷ்.
இப்போது எதற்கு இவ்வளவு பெரிய முன்னோட்டம்?
இப்போது நடிகை நயன்தாரா,போயஸ்கார்டனில் வீடு வாங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதற்காகவே இந்த முன்னோட்டம்.
தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் வட இந்தியத் திரையுலகத்திலும் கோலோச்சும் நடிகையாக விளங்கும் நயன்தாராவுக்கும் போயஸ்கார்டனில் வீடு வாங்கிக் குடியேறவேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது.நினைத்தவுடன் அங்கு வாங்கிவிட இயலாது என்பதால் நீண்டகாலம் காத்திருந்து ஒரு வீட்டை வாங்கிவிட்டாராம்.
நீச்சல்குளத்துடன் கூடிய அந்தப் பெரியவீட்டின் மதிப்பு பலகோடிகள் இருக்கும் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே,நோரா என இரண்டு நாயகிகள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.இந்நிலையில் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா.அப்படத்தின் கதாபாத்திரம் மட்டும் அதற்குக் காரணமில்லை,போயஸ் கார்டன் வீட்டுக்காகக் கொடுக்க வேண்டிய பணத்தேவைக்காகவும் தான் அந்தப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
அதோடு,இந்தியில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அந்தப்படத்தின் மொத்த சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்துவிடுகிறார்கள் என்பதற்காகவே அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இவை எல்லாம் போயஸ்கார்டன் வீட்டுக்காகத்தான் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்த்திரையுலகில் உச்சநடிகையாக இருக்கும் நயன்தாரா பற்றி வந்த சர்ச்சைகள் ஏராளம்.எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றி கண்டவர் அவர்.திரையுலக வாழ்க்கை மட்டுமின்றி,குடும்ப வாழ்க்கை,குழந்தைகள் தொடர்பாகவும் நிறைய சர்ச்சைகள் வந்தன.அவற்றையும் அநாயசமாகவே எதிர்கொண்டார்.
திரையுலகில் இன்றளவும் முன்னணியில் இருக்கும் அவருக்கு அரசியலில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.இப்போது அவர் போயஸ்கார்டனில் வீடு வாங்குவதற்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?என்பது அவர் மட்டுமே அறிந்த விசயம்.
எதுவும் நடக்கலாம்.











