September 11, 2026
விமர்சனம்

மண்டாடி – திரைப்பட விமர்சனம்

கடலும் கடல் சார்ந்த இடமும் கதைக்களம் என வைத்துக்கொண்டு,நட்பு,காதல்,இரண்டகம்,பகை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் படம் மண்டாடி.

நாயகனாக நடித்திருக்கும் சூரி,இதற்குமுன்பு நகைச்சுவுக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்.சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் வியக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார்.காதல் உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து எதாரத்த வாழ்வை ஏற்கும் ஏராளமான பெண்களின் பிரதிநிதியாத் தோன்றுகிறார்.அகவுணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு நன்று.

எதிர்நாயகனாக நடித்திருக்கும் சுகாஸ்,நாயகனுக்கு இணையான வேடமேற்று அதில்,பொருத்தமாக நடித்து வரவேற்பு பெறுகிறார்.

மச்சமுனியாக நடித்திருக்கும் சத்யராஜ்,மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர்,
சூரியின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன்,
மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், சுஹாஸின் தந்தையாக நடித்திருக்கும் சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சிவா,சூரியின் நண்பராக நடித்திருக்கும் ராம்ஸ்,சுஹாசின் மச்சானாக நடித்திருக்கும் பத்மன்,ஆடுகளம் முருகதாஸ், சுஹாசின் மகனாக நடித்திருக்கும் கிரிஷ் ஹாசன் ஆகியோர் பொறுப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்,கிடைத்திருக்கும் புதியகளத்தை முழுமையாக காட்சிப்படுத்தி இரசிகர்களை பிரமிக்க வைத்துவிட வேண்டும் என்றெண்ணி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.படகுப்போட்டிக் காட்சிகள் சிறப்பு

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம்.பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு வேகம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஈ.ராகவ்,படம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்.பலன் கிடைத்திருக்கிறது.

படத்தில், பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என்று மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.அவர்களுடைய கடும் உழைப்பு காட்சிகளாகி இரசிக்க வைக்கிறது.

கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண்,பங்கு பெரியது.உழைப்பு அளப்பரியது.

அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோர் வசனங்கள் எழுதியிருக்கிறார்கள்.கவனிக்க வைக்கின்றன.

எழுதி இயக்கியிருக்காறார் மதிமாறன் புகழேந்தி.எக்காலமும் சாகாவரம் பெற்ற மனிதவுணர்வுகளை மீனவ மக்களின் வாழ்க்கையோடு கலந்து கொடுக்கும் முடிவை எடுத்தது புத்திசாலித்தனம்.அதை சரியாகச் செயல்படுத்தி அந்தந்த உணர்வுகளுக்கு இரசிகர்கள் ஆட்பட வைத்திருக்கிறார்.திரைக்கலை என்பது காட்சி ஊடகம் என்கிற புரிதலோடு செயல்பட்டு அதற்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் துணை சேர்த்துக்கொண்டு எண்ணியதை ஈடேற்றியிருக்கிறார்.

– இளையவன்

Related Posts