September 7, 2024
விமர்சனம்

வெப் – திரைப்பட விமர்சனம்

சின்ன வயதிலேயே நல்ல வேலை, அதிகச் சம்பளம் பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அம்மாதிரியான யுவதிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் படம் வெப்.

ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் புதிதாகத் திருமணம் ஆன அனன்யா மணியையும் விருந்துக்கு அழைத்துச் சென்று மதுப் பழக்கத்திற்கு ஆளாக்கி ஆட்டம் போடுகிறார்கள்.

தலைநில்லாப் போதையுடன் வெளியே வரும் அந்நான்கு பேரையும் நாயகன் நட்டி கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். அவர்களை நட்டி ஏன் கடத்தினார்? அந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என்பனவற்றை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறது படம்.

நேரடி நாயகனை விட வில்லத்தனம் நிறைந்த நாயகன் வேடங்களில் தம் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அதிகம். அதைச் சரியாகப் பிடித்துக் கொண்டு நன்றாக நடித்து நல்லபெயர் பெறுகிறார் நட்டி. அவருடைய கோபமும் அதன்பின் இருக்கும் ஆழமான அர்த்தமும் முகபாவனைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

நாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்விபாலா சுபபிரியாமலர்,அனன்யாமணி ஆகியோர் தற்கால யுவதிகளின் பிரதிநிதிகள். தம்மை வைத்துத்தான் மொத்தப்படமும் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இளமைத்துள்ளல் காட்சிகள் படத்துக்குப் பலம்.

நான்கடவுள் ராஜேந்திரன் சிரிக்க வைக்கிறார். முரளி கவனிக்க வைத்திருக்கிறார்.

கிறிஸ்டோபர் ஜோசப்பின் ஒளிப்பதிவு, குறைந்த வாய்ப்பில் நிறைந்த காட்சிகளை வழங்கியிருக்கிறது. நாயகிகளின் கொண்டாட்டம் பார்வையாளர்களுக்கும் பற்றும் வண்ணம் அமைந்திருக்கிறது.

கார்த்திக் ராஜாவின் இசையில் அருண் பாரதி, ஆர்ஜே விஜய், ஜெகன் கவிராஜ் ஆகியோர் எழுதியுள்ள
பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.பின்னணி இசை தாழ்வில்லை.

இதுதான் ஸ்டைல் இதுதான் மாடர்ன் என்று தவறாகப் புரிந்துகொண்டு தடம்மாறும் இளையதலைமுறைக்கு அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கும் இயக்குநர் ஹாரூன்,அங்கங்கே தடுமாறினாலும் இறுதியில் யாரும் எதிர்பாரா விசயத்தை வைத்து வரவேற்புப் பெறுகிறார்.

– குமார்

Related Posts