சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
என்றார் திருவள்ளுவர்.
அதிகாரவர்க்கத்திடம் அணுகிப்போனால் ஆபத்து அதேசமயம் விலகிப் போனாலும் ஆபத்து என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக வந்திருக்கும் படம் சான்றிதழ்.
எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு கிராமத்துக்கு இந்திய அரசாங்கம் விருது தர முன்வருகிறது. அதை ஏற்க மறுப்பதாலேயே அந்தக் கிராமத்துக்கு எதிரியாகிறார் ஓர் அமைச்சர். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? அந்தக் கிராமம் அப்படி மாறக் காரணமானவரின் கதை என்ன? ஆகியனவற்றைச் சொல்லியிருக்கும் படம்தான் சான்றிதழ்.
வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் நாயகன் ஹரிகுமார்,ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடியவர்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறார். அமைதி வேகம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹரிகுமாரைக் காதல் காட்சிகளில் நடிக்க வைக்க வேண்டாமென முடிவெடுத்த இயக்குநர் அதற்காக, ரோஷன்பஷீர் ஆசிகா அசோகன் ஆகியோரை இளம்ஜோடியாக வைத்திருக்கிறார்.அவர்களும் இளைஞர்களைக் கவரும் வண்ணம் இருக்கிறார்கள்.
அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவிக்கு அந்த வேடம் அல்வா சாப்பிடுவது போல. எளிதாகச் செய்திருக்கிறார்.
அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் ஆகியோரும் தத்தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அழகான கிராமம் கதைக்களம் என்றதும் உற்சாகமாக அதை வளைத்து வளைத்துப் படம் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன்.
பிஜிஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் குறைவில்லை.
மாலை ஆறுமணிக்கு மேல் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கக்கூடாது என்று பெண்களுக்கும் மதுக்குடிப்பவர்கள் மிகக்குறைவான அளவில் குடிக்கவேண்டும் என்று ஆண்களுக்குக் கட்டுப்பாடு ஆகியன பொருத்தமில்லாமல் இருக்கின்றன என்றாலும் அதன் நோக்கம் நல்லெண்ண அடிப்படையில் இருக்கிறது என்பதால் இயக்குநர் ஜேவிஆருக்கு நற்சான்று தரலாம்.
– குமார்.