Uncategorized விமர்சனம்

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் – ஆவணப்பட விமர்சனம்

கேரளாவின் சிறிய நகரமான திருவல்லாவில் சிஏ படிக்க ஆர்வமாக இருந்தவர் டயானா.அவரைத் தேடி திரைப்பட வாய்ப்பு வருகிறது.முதலில் மறுத்த அவர் பின்பு சம்மதித்தார்.அதன் விளைவு, 2003 ஆம் ஆண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ மலையாளப் படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன் அந்திக்காடு.

அதன்பின் தமிழில் சரத்குமாருடன் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். 21 ஆண்டு காலமாக திரைத்துறையில் தனித்தொரு பெண்ணாக கோலோச்சும் நடிகையாக இருக்கிறார்.

அவருடைய இந்தத் திரையுலகப் பயணம் மற்றும் திருமண பந்தம் ஆகியனவற்றை விவரிக்கும் ஆவணப்படம் நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – விசித்திரக் கதைக்கு அப்பால்).

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கை குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

இயக்குநர்கள் சத்தியன் அந்திக்காடு, ஃபாசில்,அட்லீ நடிகர்கள் விஜய் சேதுபதி, ராணா, நாக சைதன்யா,உபேந்திரா,நடிகைகள் ராதிகா, பார்வதி, தமன்னா ஆகியோர் நயன்தாரா பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

தன் காதல் வாழ்க்கை குறித்தும், நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டது பற்றியும் அதுகுறித்து இன்றும் தன்னிடம் கேட்பவர்கள், பொய்க் கதைகளை உருவாக்குபவர்கள், சம்பந்தப்பட்ட ஆணிடம் அது தொடர்பாக ஏன் கேட்கவில்லை? அவர்களை விமர்சிக்காதது ஏன்? என்பது பற்றியெல்லாம் பேசும் நயன்தாரா,ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறி அதிர வைக்கிறார்.இப்போது எல்லோராலும் இரசிக்கப்படும் நயன்தாரா, தொடக்கத்தில் உருவகேலி, உடல் எடை தொடர்பான விமர்சனங்களை எதிர்கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.அதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினேன் என்றும் சொல்லி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

திரையுலக வாழ்க்கைக்குப் பின்னர் காதல் பயணம் பற்றியும் விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.

பேலோன் ஃபொன்சேகா இசையமைத்திருக்கும் இந்த ஆவணப்படத்தை அமித் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

– இளையவன்

பின்குறிப்பு – இந்தப்படம் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் நவம்பர் 18 ஆம் தேதி முதல் காணக்கிடைக்கிறது.

Related Posts