வணங்கான் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – இரசிகர்கள் கொண்டாட்டம்
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார்.சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.
இப்படத்தை,சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்துள்ளன.
‘மாநாடு’ என்கிற பெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதுடன், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
அதுமட்டுமல்ல, “படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. எனது திரையுலக பயணத்தில், ‘வணங்கான்’ ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை” என சமீபத்தில் நாயகன் அருண்விஜய் நெகிழ்ந்து போய்க் கூறியது இன்னும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.
ஏற்கனவே ‘வணங்கான்’ படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியவை வெளியாகி இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.விரைவில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்கிறார்கள்.
இந்நிலையில் ‘வணங்கான்’ திரைப்படம், தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பண்டிகை வெளியீடாக ஜனவரி 10,2025 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
இந்த அறிவிப்பை இயக்குநர் பாலா இரசிகர்களும் நாயகன் அருண்விஜய் இரசிகர்களும் பொதுவான திரைப்பட இரசிகர்களும் கொண்டாட்டமாய் பகிர்ந்து வருகிறார்கள்.











