November 28, 2026
சினிமா செய்திகள்

புதியபடம் தொடங்குகிறது டான் பிக்சர்ஸ் – விவரம்

தமிழ்த் திரையுலகுக்குள் நுழையும்போதே,தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை,சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த பராசக்தி ஆகிய பெரிய படங்களுடன் வந்தது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதோடு,இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம்,சிம்பு,கயாடுலோகர் உட்பட பலர் நடிக்கும் எஸ்டிஆர் 49 மற்றும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகியனவற்றைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,கடந்த ஆண்டு அந்நிறுவனம் திடீரென அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளானது.அதனால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உடனடியாகத் தொடங்கவிருந்த சிம்பு படம் தடைபட்டது.

அதன்பின்,சில மாதங்களில் சட்டப்போராட்டம் நடத்தி மீண்ட டான் பிக்சர்ஸ் நிறுவனம்,தடைபட்டிருந்த இதயம் முரளி படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தியது,அப்படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டது.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரனே இயக்கியிருந்த இதயம் முரளி படம்,ஜூலை 10 ஆம் தேதி வெளியானது. இதயம் முரளி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று அந்நிறுவனத்துக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து,அந்நிறுவனம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சிம்பு,தனுஷ் உள்ளிட்டோரின் படங்களைத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால்,இப்போது அந்நிறுவனம் ஒரு புதியபடத்தைத் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

புது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஒருபடத்தைத் தொடங்கவிருக்கிறார்கள்.கதாநாயகியை முதன்மையாகக் கொண்ட அப்படத்தில், ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.மற்ற நடிகர் நடிகையரை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

குறைந்த செலவில் (சுமார் பத்துகோடிக்குள்) எடுக்கப்படவிருக்கும் இப்படம் ஒரு பேய்க்கதையாம்.அதனால்,ப்ரீத்திமுகுந்தனை நாயகியாக்கி எடுக்கவிருக்கிறார்களாம்.

தொடங்கும்போதே பெரிய பெரிய படங்கள் என்று தொடங்கி அவற்றில் முதலிரண்டு பெரிய படங்களும் நட்டத்தைச் சந்தித்ததால் ஏற்பட்ட சிக்கல்,அதைத் தொடர்ந்து அரசாங்கங்களால் ஏற்பட்ட சிக்கல் ஆகியனவற்றால் அந்நிறுவனத்தின் பயணம் தடைபட்டது.

அவற்றைத் தாண்டி மீண்டும் படமெடுக்க வரும்போது,முன்பு செய்தவற்றினில் பாடம் படித்து,நல்ல கதை,சின்ன செலவு என்கிற பாதையில் அந்நிறுவனம் அடியெடுத்து வைக்கிறது என்றும் இதுபோல்,இன்னும் சில படங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.

அப்படியானால் இனிமேல் பெரிய செலவு பிடிக்கும் படங்கள் எடுக்கமாட்டார்களா? என்று கேட்டால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கும் சிம்பு,தனுஷ் ஆகியோரது படங்களையும் அடுத்தடுத்து தொடங்கவிருக்கிறார்கள்.அவர்கள் இருவரும் தற்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவை முடிந்தவுடன்,அவர்கள் கொடுக்கிற தேதிகளையொட்டி அப்படங்கள் தொடங்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts