டிசம்பர் 24 இல் 8 படங்கள் – சங்கங்கள் என்ன செய்கின்றன?
தமிழ்த்திரைப்படங்களின் வெளியீடுகளை முறைப்படுத்த வேண்டும் என பல காலமாக கோரிக்கை இருக்கிறது.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,ஃபிலிம் சேம்பர் உட்பட பல அமைப்புகள் இருந்தும் இதைச் செய்யவில்லை.
இதனால்,தயாரிப்பாளர்களும்,எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்களும் நொடிந்து போகும் நிலை ஏற்படுகிறது.
வருகிற டிசம்பர் 24 ஆம் தேதியன்று எட்டுப்படங்கள் வெளியாவதாகச் சொல்லப்படுகிறது.சில படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.சில படங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
விஷ்ணுவிஷாலின் இரண்டு வானம்,மணிகண்டனின் மக்கள் காவலன்,பிரபுதேவா வடிவேலுவின் மூன்வாக்,ஜீவாவின் தகப்பன்,அக்ஷய்குமாரின் ராவடி,
ஷாருக்கானின் கிங்,நாகார்ஜுனாவின் கிங் 100 மற்றும் ஜுமாஞ்சி 4 ஆகிய எட்டுப்படங்கள் வெளியாகவிருக்கின்றனவாம்.
இவை எல்லாமே ஒவ்வொரு வகையில் குறிப்பிடத்தக்க படங்கள்.
இவ்வளவு படங்கள் ஒரேநாளில் வெளியாகின்றன என்றால் திரையரங்குகளைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் சிக்கல்.
கடந்தவாரம் வெளியான நான்கு படங்களில் ஒருபடம் மற்றவற்றைவிட நன்றாக இருக்கிறது என்று பெயர் வாங்கியது.ஆனால் வசூலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது.அதுவும் குறைவான வசூல் என்கிறார்கள்.ஏனெனில்,அந்தப்படத்துக்கு போதுமான அளவிலும்,நல்ல திரையரங்குகளும் கிடைக்கவில்லையாம்.
நான்கு படங்கள் வரும்போதே இப்படியெனில் எட்டுப்படங்கள் வந்தால் என்னவாகும்?
அதோடு,எட்டுப்படங்கள் வருகிறதென்றால்,குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் படம் வாங்கிய விநியோகஸ்தர்களும்,விநியோக அடிப்படையில் நேரடியாக வெளியிடும் தயாரிப்பாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
மற்ற நேரங்களில்,திரையரங்குக்காரர்களிடமிருந்து வருகிற முன்பணம்,இந்தமாதிரி நேரங்களில் வராது.ஒரு படத்தின் விநியோகஸ்தர்,முன்பணம் கொடுத்தால்தான் படம் தருவேன் என்று சொன்னால்,உன் படமே வேண்டாம்.வேறுபடம் அதுவும் முன்பணம் கேட்காத வேறுபடம் போட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவார்கள்.
அண்மையில் ஒரு தயாரிப்பாளர் படவெளியீட்டின்போது கதறி அழுதாரே அந்தநிலையை எல்லோருக்கும் ஏற்படுத்திவிடும்.
அதோடு,படம் நல்லாருக்கு தனியா வந்திருந்தா நெறைய திரையரங்குகளில் போட்டு அதிகவசூல் பார்த்திருக்கலாம் என்கிற குரல்களைக் கேட்கமுடியும்.
இதனால்தான்,படவெளியீடுகளை முறைப்படுத்த வேண்டுமென எல்லோரும் கோரிக்கை வைக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளிட்ட எந்த சங்கமும் இதைக் கணக்கில் கொள்ளவே இல்லை.
இதனால்,வாராவாரம் சில தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெருநட்டங்களையே சம்பாதிக்கின்றனர்.
வெகுமக்களை மகிழவிக்கப் பாடுபடுகிற கலைத்துறையில் தங்கள் வாழ்நாள் உழைப்பையெல்லாம் முதலீடு செய்யும் சிலர் மொத்தமாக முடிந்தே போகின்றனர்.
எல்லோரும் ஒருங்கிணைந்து கொஞ்சம் திட்டமிட்டால்
இதை முறைப்படுத்திவிடலாம்.
ஆனால் உளச்சுத்தியோடு இதைச் செய்ய யாரும் அணியமாக இல்லை என்பது பெரும் சோகம்,பெருங்கோபமும் கூட.
– திரு











