ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்
கிராமமொன்றில்,பெண்கள் அதிகம் படிக்கக்கூடாது என்கிற மனநிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்த பெண்,பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகளைத் தாண்டி உச்சம் தொடும் கதை.உச்சம் என்றால் உண்மையிலேயே உச்சமாக விண்வெளி வீராங்கனை ஆகிறார்.அந்தப்பயணக்கதை தான் ஆகாயத்தில் ஒரு தாரகை.
நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானின் கதாபாத்திரம் ஆகச்சிறந்த கதாபாத்திரம்.பல்வேறு சிக்கல்களுக்குள்ளாகவே வாழ்க்கை நடத்தும் நடுத்தட்டு மனிதராக நடித்திருக்கிறார்.ஆனால் அவருடைய எண்ணங்கள் ஆகாயமளவுக்கு உயர்ந்தவை.அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக நடித்துள்ளார்.அவருடைய எதார்த்த நடிப்பு பல்வேறு உண்மைகள் பொதிந்த நடிப்பு.
தலைப்பில் இருக்கும் தாரகையாக நடித்திருக்கும் சாத்விகா வீரவல்லி,அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.தந்தை உட்பட எல்லோரும் கல்வி கற்கத்தடையாக் இருப்பதை எண்ணித் துடிக்கும்போதும் கல்வி கற்கச் செல்லுமிடத்தில் நடக்கும் பாகுபாடுகளை நினைத்துத் தவிக்கும்போதும் மிளிர்கிறார்.
துல்கரின் அக்காவாக வரும் சுவாசிகா,விண்வெளி சார்ந்த பணிகளில் நாயகிக்கு ஆதரவாக இருக்கும் ஸ்ருதிஹாசன்,குஜராத்தில் துல்கர் சந்திக்கும் ஒரு பெண்ணாக ருஹானி சர்மா உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
நாசர்,கெளதம் மேனன்,முரளி சர்மா,சின்னி ஜெயந்த் ஆகியோரும் நன்று.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு,படத்தின் கதைக்களத்தில் உற்சாகமாகப் பயணித்திருக்கிறது.விண்வெளி தொடர்பான வரைக்கலைக் காட்சிகள் சிறப்பு.
ஜி.வி.பிரகாஷ் இசை,படத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
பிரவின் கே.எஸ். படத்தொகுப்பு செய்துள்ளார்.படம் சீராகப் பயணிக்க வைத்திருக்கிறார்.
கதை திரைக்கதை எழுதியுள்ள குன்னம் கங்கராஜுவின் சிந்தனை பாராட்டுக்குரியது.
பவன் சதினேனி இயக்கியுள்ளார்.சமுதாயத்தில் சரிபாதியாக பெண்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதிலிருந்து மீண்டு அந்தச் சக்தியைப் பயன்படுத்தும் உயரிய வழிமுறையைச் சொல்லியிருக்கிறார்.
அதை நம் குடும்ப அதைப்பு,சமூக அமைப்பு,நாட்டுநடப்பு ஆகியனவற்றை சரிவிகிதத்தில் கலந்து சொல்லியிருக்கிறார்.சுவாசிகா கதாபாத்திரம் மற்றும் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் ஆகியன உணர்த்தும் உணர்வுகள் ஏராளம்.பலரது அகவிழிகளை இந்தக் கதாபாத்திரங்கள் திறந்து வைக்கும் என்று நம்பலாம்.
படம் பார்ப்போர் அனைவரும் பார்க்கும்போது இரசிக்கவும் பார்த்த பின்ப சிந்திக்கவும் செய்வார்கள் என்பது திண்ணம்.
– அருள்












