November 21, 2026
விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் என்றவுடன் தமிழ்தக்களுக்கு நினைவு வருவது முருகக்கடவுள்தான்.அந்தப் பெயரில் வந்திருக்கும் இந்தப்படத்தில்,ஆபரேசன் மோல் எனும் ஆங்கிலச் சொல்லின் முதலிரண்டு எழுத்துகள்தாம் ஓம்.ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கூட்டத்தைப் பிடிக்க காவல்துறையால் நடத்தப்படுவதுதான் ஆபரேசன் மோல்.

கடத்தல் கூட்டத்தின் தலைவனாக மம்முட்டி,அவருடைய தளபதியாக தனுஷ்,இந்தக்கூட்டத்தைப் பிடிக்க முயலும் காவலதிகாரியாக சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.காவல்துறை நினைத்ததுபோல நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.இந்தப்படத்தில்,கடத்தல் கூட்டத்தலைவனின் பெருநம்பிக்கைக்குரிய அடியாள்,கடமை தவறாத காவலன்,பாசமிகு மகன் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.மகனாக கூடுதல் வரவேற்புப் பெறுகிறார்.

யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதுபோல மம்முட்டிக்கு அமைந்துள்ளது.அதிலும் நேர்த்தி காட்டி இரசிக்க வைத்திருக்கிறார் மம்முட்டி.அவர் பேசியிருக்கும் வசனங்கள் முக்கியமானவை.

அழகான ஆசிரியை,அன்பான காதலி,நேசமிகு மனைவி ஆகிய வேடங்களில் பார்த்துப் பழகிய சாய்பல்லவிக்கு இப்படத்தில் அதிரடியான காவலதிகாரி வேடம்.இதுலும் நான் சளைத்தவளில்லை என்று நிருபித்திருக்கிறார்.

தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் ஶ்ரீலீலா,முக்கிய வேடமேற்றிருக்கும் இந்தி நடிகர் நஸ்ருதின்ஷா,கருப்பு புகழ் இந்திரன்ஸ் ஆகியோரும் நன்று.

ஒளிப்பதிவாளர் கே.எழிலரசுவின் உழைப்பில் இருமை படர்ந்த செம்மரக்காடுகளும் விட்டில்பூச்சிகளாய் அதில் சிக்கும் வறுமை நிறைந்த திருவண்ணாமலை கிராமங்களும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

கதையின் போக்கை தொடக்கத்திலேயே வெளிப்படுத்திய பின்பும் படத்தில் தொய்வு வராமல் பாதுகாத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன்.

எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆந்திரக்காடுகளில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்விலிருந்து நூல்பிடித்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.திரைப்படத்துக்காக திரைக்கதையில் சில முக்கிய திருப்பங்களைச் சேர்த்திருக்கிறார்.

குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டோரை குற்றவாளிகள் என்று நிறவுஙதற்காகப் பாடுபடும் அதிகார வர்க்க மனநிலையை அடித்து உடைத்திருக்கிறார்.தனுஷ் மற்றும் மம்முட்டி கதாபாத்திரங்கள் மூலம் அவர் பேசியிருக்கும் அரசியல் காத்திரமானது.

அதைத் திரைப்பட எல்லைக்குள் சுருக்கிச் சொல்வதில் சில சறுக்கல்களைச் சந்தித்திருக்கிறார்.ஆனாலும் எடுத்துக் கொண்ட விசயத்தை பொதுப்புத்தியிலிருந்து அணுகாமல் பாதிக்கப்பட்ட மக்கள் பார்வையிலிருந்து அணுகியிருப்பது வரவேற்புக்குரியது.

– இளையவன்

Related Posts