September 25, 2026
விமர்சனம்

லெனின் பாண்டியன் – திரைப்பட விமர்சனம்

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு விவசாயி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப்படம்.விவசாயி கங்கைஅமரன் மனைவி ரோஜாவுடன் வாழந்து வருகிறார்.இயற்கையைச் சீரழிக்கும் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறார்.அவர் மட்டுமே போராடி வென்றார் என்றால் பொருத்தமாக இருக்காது என்பதால் ஓர் இளம்காவலரைக் கதைக்குள் கொண்டுவந்து போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.அந்தப் போராட்டம் வென்றதா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடைதான் படம்.

இப்படத்தில் நாயகனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் தர்ஷன் நடித்திருக்கிறார்.முதல்படம் என்று தெரியாத அளவுக்கு அவருடைய நடிப்பு இருக்கிறது.காவலர் வேடம் ஏற்று அதற்குரிய மிடுக்கு அலட்சியம் ஆகியவற்றுடன் உணர்வுப்பூர்வமாக நடிக்கவேண்டிய காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

விவசாயியாக நடித்திருக்கும் கங்கைஅமரன்,அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.உடல்மொழியிலிருந்து சின்னச் சின்ன அசைவுகள் வரை சரியாக வெளிப்படுத்தி பாராட்டுப்பெறுகிறார்.

கங்கை அமரனின் மனைவியாக நடித்திருக்கும் ரோஜா நன்று.இதுவரை அவரைப் பார்த்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடமேற்றிருக்கிறார்.எந்தக் கதாபாத்திரமானாலும் என்னால் செய்யமுடியும் என்று சவால்விட்டு நடித்திருக்கிறார்.

கிராமநிர்வாக அலுவலராக வரும் அர்ச்சனா,நீதிபதியாக வரும் ஜார்மரியான், போஸ் வெங்கட்,யுகேந்திரன்,ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்கள் அனுபவ நடிப்பால் படத்துக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.குறிப்பாக ஜார்ஜ்மரியான் வரும் காட்சிகளுக்குப் பெரும் வரவேற்பு.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே உழைப்பில்,ஒரு கிராமத்துக்குள் சென்றுவந்த உணர்வு கிடைக்கிறது.அதன் நிறம் குணம் மாறாமல் படமாக்க முயன்று வென்றிருக்கிறார்.சில காட்சிகளில் அவர் அமைத்திருக்கும் ஒளியமைப்பு வியக்க வைத்திருக்கிறது.

இளையராஜா இசைத்திருக்கிறார்.பாடல்களும் பின்னணி இசையும் எப்போதும் போல சிறப்பு என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்,கதையின் தன்மையை உணர்ந்து படத்தைத் தொகுத்திருக்கிறார்.முதல்பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம்பாதியில் குறைந்திருப்பது பலவீனம்.

சமுதாய அக்கறையுடன் ஒரு படத்தைக் கொடுக்கவேண்டும் என்கிற முனைப்பில் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.டி.பாலசந்திரன்.நாம் கண்டு கேட்ட பல உண்மை நிகழ்வுகளைத் தொகுத்து அதற்குள் ஓர் உணர்வுப்பூர்வமான கதையையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.நல்லகதையை எழுதினால் மட்டும் போதாது அதை அனைவரும் ஏற்கும் வகையில் திரைக்கதையாக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருக்கிறது.அதனால் படத்தில் இருக்கும் சிற்சில குறைகள் பெரிதாகத் தெரியாமல் அமுங்கிப்போகின்றன.

– இளையவன்

Related Posts