இராமாயணா – திரைப்பட விமர்சனம்
தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுப்பதால் கோபம் கொண்டு சீதையைக் கடத்திச் செல்கிறார் இராவணன்.அவரை மீட்க ராமன் போராடுவதுதான் இராமாயணம்.பல்லாண்டுகளாக எழுத்தாகவும்,திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் உலவிக் கொண்டிருக்கும் இந்தக் கதையை,நவீன தொழில்நுட்பங்கள் உதவியால் மிகப்பெரிதாக்கிக் காட்டியிருக்கிறது இந்தி இயக்குநர் நிதிஷ்திவாரி இயக்கியிருக்கும் இராமாயணா.
இராவணனாக நடித்திருக்கிறார் யாஷ்.கதைப்படி அவர் எதிர்மறையாளர் என்றாலும் இப்படத்தின் அவருக்கான காட்சிகள்,அவற்றில் அவருடைய நடிப்பு,அவருக்குக் கொடுக்கப்படும் பெருமிதங்கள் ஆகியனவற்றினால் அவரே கதாநாயகனாக இருக்கிறார்.கேஜிஎஃப்கள் மூலம் அவர் கட்டியெழுப்பி வைத்திருக்கும் திரைபிம்பத்துக்கு இராவணன் வேடம் மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது.
இராமனாக நடித்திருக்கும் ரன்பீர்கபூர்,தொடக்கத்தில் அவராகவே தெரிந்தாலும் போகப்போக இராமனாகவே மாற்றம் பெறுகிறார்.ஏற்கெனவே புகழ்பெற்றிருக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கு தன்னால் எந்தக் களங்கமும் வந்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருக்கிறார்.
சீதையாக நடித்திருக்கிறார் சாய்பல்லவி.சீதையாக நடிப்பது நடிகைகளுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு.சாய்பல்லவி சீதையாக நடித்திருப்பது சீதைக்கே பெருமை என்று பாராட்டக்கூடிய வகையில் நடித்திருக்கிறார்.அவருடைய இயல்பான இருப்பும் அழகான புன்னகையும் சீதையின் புகழுக்குப் புகழ் சேர்க்கிறது.
இராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால்,சூர்ப்பனகையாக ரகுல்பிரித்சிங்,இராமனின் தம்பி இலட்சுமணனாக ரவிதுபே ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.
கைகாசியாக நடித்திருக்கும் ஷோபனா,கைகேயியாக நடித்திருக்கும் லாரா தத்தா ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
பங்கஜ்குமார்,ரமேஷ் லிமயி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.பெரும்பாலானோருக்குத் தெரிந்த கதையை வியந்து பார்க்க வைக்க நாம்தான் உழைத்தாக வேண்டும் என்கிற உணர்வோடு பணியாற்றியிருக்கிறார்கள்.அதனால் படம் பிரமாண்டமாகியிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தி லயன் கிங்,கிளாடியேட்டர் உள்ளிட்டு உலகப்புகழ் பெற்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.இருபெரும் ஜாம்பவான்களின் இருப்பு படத்தைப் பன்மடங்கு பெரிதாக்கியிருக்கிறது.
அமீர்கான் நடித்த தங்கல் படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்ற நிதிஷ்திவாரி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.தொடங்கும்போதே கதையிலோ திரைக்கதையிலோ நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது காட்சிகளில் மிரட்டிவிட வேண்டும் என்கிற முடிவோடு களமிறங்கியிருக்கிறார்.படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் குறிப்பாக இராவணன் அறிமுகக்காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் மயிர்க்கூச்செறிய வைத்திருக்கின்றன.தெரிந்த கதை என்பதால்,அங்கங்கே ஏற்படும் தொய்வுகளைத் தாண்டி நல்ல காட்சியனுபவத்தைக் கொடுக்கும் படமாக வந்திருக்கிறது.
– கதிரோன்











