விமர்சனம்

வாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்

விலங்கு இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் வாரண்ட்.

பெற்றோரின் விருப்பத்துக்காக காவல்துறை பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால் வெகுண்டெழுகிறார்.அந்த மனநிலையில் அவர் செய்யும் வேலை பெரிய சிக்கலுக்கு ஆளாக்குகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருப்பதுதான் வாரண்ட்.

அமைதியான முகம்,மிரட்சியான கண்கள்,கொழுக் மொழுக்கென்ற உடல் ஆகிய காவல்துறைக்குப் பொருத்தமேயில்லாத ஒருவர்,காவல்துறை பணியில் இருக்கிறார் என்பதே சுவாரசியம்.அதில் அவருடைய செயல்பாடுகள் கூடுதல் சுவாரசியம்.இயக்குநர் வேலையை மட்டும் பார்க்காமல் இவருக்கு ஏன் இந்த வேலை? என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.நடிப்பிலும் குறைவில்லை.

நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி என மூன்றுபேர் இருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் திரைக்கதையில் உரிய பங்கு இருக்கிறது.அவற்றில் அவர்கள் இயல்பாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் அருள்தாஸ்,காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி மற்றும் கொடைக்கானல் சரவணன் ஆகியோரும் நன்றாக நடித்து தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தொடருக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அசோக்குமார்,திரைக்கதையின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அதற்கேற்ப ஒளியமைப்பு செய்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.அதனால் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

சாம்.சி.எஸ் பின்னணி இசைத்திருக்கிறார்.அதனால்,தொடரின் பல காட்சிகள் முன்னணிக்கு வந்திருக்கின்றன.நகைச்சுவை,கோபம்,ஆதங்கம் ஆகிய உணர்வுகளை இசையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் ஆர்.ராமர்,ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கம் எப்படியிருக்க வேண்டும்? முடிவு எப்படியிருக்க வேண்டும்? என்று திட்டமிட்டு தொகுத்திருக்கிறார்.அதனால் அடுத்தடுத்த அத்தியாயங்களை விடாமல் பார்க்க வைத்திருக்கிறார்.

பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.காவல்துறையினர் ஏன் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான உளவியல் ரீதியான விளக்கம் கொடுத்ததோடு அவற்றைச் சிறப்பான காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போலும்.காவல்நிலையங்களில் மிகத் தாரளமாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள் தொடரிலும் நிறைந்திருக்கின்றன.

விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார்.எழுத்திலும் அவர் பங்களிப்பு இருப்பதால் காட்சிகள் அமைப்பதில் தெளிவு இருக்கிறது.விலங்கு தொடருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் இரசிகர்கள் வாரண்ட் இல்லாமலே வந்துவிடுவார்கள்.

– இளையவன்

குறிப்பு – இந்த இணையத் தொடர் ஜீ 5 இணையதளத்தில் மே 22 முதல் காணக்கிடைக்கிறது.

Related Posts