விமர்சனம்

இறைவன் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன்.

கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே மிடுக்குடன் நயன்தாராவையும் அணுகுகிறார்.குற்றவுணர்ச்சியில் நண்பரை எண்ணிக் கலங்கும்போது வேறு முகம் காட்டுகிறார்.ஒன்றுக்கு இரண்டு கனமான வில்லன்களைத் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவியைத் தேடித்தேடிக் காதலிக்கும் வேடம் நயன்தாராவுக்கு. அதை அவர் நன்றாகச் செய்திருக்கிறார். அவரை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்.

ஜெயம்ரவியின் நண்பர், இன்னொரு காவல் அதிகாரி என வரும் நரேன், நட்புக்கு இலக்கணமாகிறார்.அதற்கேற்ப நடித்துமிருக்கிறார்.

ஆசிஷ்வித்யார்த்தி, பக்ஸ், சார்லி ஆகியோரில் சார்லி முதன்மை பெறுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல்போஸ், உளவியல் சிக்கல் ஏற்படும் மனிதர்களீன் பிரதிநிதியாகி பயப்பட வைக்கிறார்.

அவ்வளவு கொடூரமான ராகுல்போஸைத் தாண்டி தன்னைக் கவனிக்க வைத்திருக்கிறார் வினோத்கிஷன்.அவருடைய பார்வையிலேயே அவருடைய குணத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரி கே.வேதானந்த், இந்தக் கதையின் உள்ளடக்கத்தை உள்வாங்கி அதற்கேற்ற ஒளியமைப்புகள் மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

மணிகண்டபாலாஜியின் படத்தொகுப்பில் அறிமுகக்காட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்துவிட்டார்.

உளவியல் கொலைகாரர்கள் பற்றிய படங்கள் ஆங்கிலத்தில் அதிகம். அதுபோன்றதொரு கதையைத் தேர்வு செய்து அதை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகவே கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் அகமத்.நடிகர்கள் தேர்வு, திரைக்கதையில் நேர்த்தி ஆகியனவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்.

– குமரன்

Related Posts