சந்திரமுகி 2 – திரைப்பட விமர்சனம்
சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது.
இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார். பல இடங்களில் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.சாதாரண நாயகர்கள் போல் அல்லாமல் சூப்பர்ஹீரோக்கள் போல அவருடைய அறிமுகக் காட்சிகளை அசத்தலாகக் கொடுக்க நினைத்திருக்கிறார்கள்.அவரும் அதற்கேற்ப உழைத்திருக்கிறார்.
சந்திரமுகியாக ஜோதிகாவைப் பார்த்தோருக்கு கங்கனா ஏமாற்றம் தருகிறார். முதல்தலைமுறை இரசிகர்களுக்கு இவர்தான் சந்திரமுகி.
இலட்சுமிமேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே,சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகிய நாயகிகளில் இலட்சுமிமேனனுக்குக் கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ராதிகா, சுரேஷ்மேனன், ராவ்ரமேஷ் உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
முதல்பாகத்தில் அந்த அரண்மனைக்குள் போகவே பயப்படும் வடிவேலு, இந்தப் பாகத்தில் அந்த அரண்மனைக்கே சொந்தக்காரராக வருகிறார்.சில இடங்களில் நன்றாகச் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.ஏராளமான நடிகர்கள் இருந்தும் அவரவர்க்குரிய திரைவெளியைக் கொடுத்திருக்கிறார்.
எம்.எம்.கீரவாணி இசையில் ஸ்வாகாதஞ்சலி, ரா ரா ஆகிய பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. மற்ற பாடல்களும் முதல்பாகத்தின் பாடல்களை நினைவுபடுத்துகின்றன.பின்னணி இசையில் கூடுதல் உற்சாகம் காட்டிவிட்டார் அவர்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தைத் தொகுக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.தோட்டாதரணியில் கலை இயக்கம் நன்று.
இரண்டாம்பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருப்பதால், கதை, திரைக்கதை மற்றும் நடிகர்கள் ஆகிய அனைத்திலும் முதல்பாகத்தின் தொடர்ச்சியாகத் தெரியவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். முதல்பாகத்தில் மனிதர்களாக இருந்தவர்களை இந்த பாகத்தில் ஆவிகளாக மாற்றி இற்றைப்படுத்தியிருக்கிறார்.
புதிதாகப் பார்ப்போருக்குக் குறையொன்றுமில்லை.
– இளையவன்












