விமர்சனம்

7 (செவன்) – திரைப்பட விமர்சனம்

என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள்.

காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்.

காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது என்கிறார். நான்காவதாக வந்த ஒரு பெண் அவரைச் சுட்டுக் கொல்ல முயல்கிறார்.

அந்த நாயகன் யார்? அந்த மூன்று பெண்கள் எவர்? நாயகனைச் சுட்டவர் யார்? எதற்காகக் கொலைகள் நடக்கின்றன? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் 7.

நாயகன் ஹவிஷ்தான் என் கணவர் எனச் சொந்தம் கொண்டாடும் நந்திதா ஸ்வேதா, த்ரிதா செளத்ரி, அதிதி ஆரி ஆகிய மூவரும் காதல் காட்சிகளில் தாராளமாக நடித்து ரசிகர்களைக் கவருகிறார்கள். மூவரில் த்ரிதா அழகிலும் நடிப்பிலும் முந்துகிறார்.

நான்காவதாக வருகிற ரெஜினா அருமை. அவருடைய பாத்திரப்படைப்பு எதிர்பார்க்க முடியாதது. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நான்கு பேர் போட்டி போடும் அளவுக்கு அழகானவர் இல்லையெனினும் கொடுத்த வேடத்துக்கு மதிப்பு சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார் நாயகன் ஹவிஷ்.

படத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை இந்த வழக்கைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமான், தன் தேர்ந்த நடிப்பால் காட்சிகளைக் கவனிக்க வைக்கிறார்.

நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அவர் மது அருந்திக்கொண்டே இருப்பது நியாயமாக இல்லை.

த்ரில் படத்துக்குத் தேவையான இசையைப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் சைத்தன் பரத்வாஜ். பாடல்களைவிட காட்சிகள் கவர்கின்றன.

கதை திரைக்கதை எழுதியிருக்கும் ரமேஷ்வர்மா, புத்திசாலித்தனமாக எழுதியிருக்கிறார். சில நம்ப முடியாத காட்சிகளும் இருக்கின்றன.

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு படத்தின் பயணத்தில் சலிப்பேற்படாமல் வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் நிஷார் ஷஃபி. திரைக்கதை அளவுக்கு ஒளிப்பதிவும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

காதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

Related Posts