விமர்சனம்

பிகில் – திரைப்பட விமர்சனம்

ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு  சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய்.
 
அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். 

தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில் நடித்திருக்கிறார்.  

தாதாவாக மாஸ் காட்டுகிறார் விஜய். பட்டாசை கொளுத்திப் போட்டு அறிமுகமாகிறார். அவருடைய பெருமைகளைக் காட்சிப்படுத்தாமல் வசனங்களிலேயே சொல்கிறார்கள்.

மைக்கேல் பிகில் என இரண்டு பெயர்களில் மகன் விஜய்யும் ராயப்பன் என்கிற பெயரில் அப்பா விஜய்யும் இருக்கிறார்கள்.
 
ராயப்பன் வேடத்துக்காக நரைத்த தலை, திக்குவாய்ப் பேச்சு என வித்தியாசம் காட்டியிருக்கிறார் விஜய். அது அவ்வளவு பொருத்தமாக இல்லை.

மகன் விஜய், வழக்கம் போல் புகுந்து விளையாடுகிறார். டெல்லி காவல்நிலையத்தில் உட்கார்ந்து கொண்டே அவர்களை அலற விடுவது, மலேசியா விமான நிலையத்தில் ஜாக்கி ஷெராஃபுக்கு ஆப்பு வைப்பது ஆகியன விஜய்யிசம்.

நயன்தாரா நாயகி. விஜய்க்கும் அவருக்குமான காதல் காட்சிகள் மிகக்குறைவு. பிற்பாதியில் விஜய்க்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

விஜய்யின் நண்பராக வரும் கதிர், கால்பந்து வீரர்களாக நடித்திருக்கிற இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா மற்றும் நிஜ கால்பந்து வீராங்கனைகள் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

யோகிபாபு, விவேக் ஆகியோர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்கள்.

விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை ஈர்ப்பாக இல்லை.

படத்தொகுப்பாளர் ரூபன், அரைமணி நேரப்படத்தைக் குறைத்திருக்கலாம். 

கால்பந்து வீரர் பிகில் ஒரு கட்டத்தில் தாதா மைக்கேலாகி மீண்டும் ஒரு கட்டத்தில் கால்பந்து பயிற்சியாளர் மைக்கேல் ராயப்பனாகிறார் என்கிற ஒற்றை வரிக் கதைக்குத் தேவைக்கு மேல் திரைக்கதை அமைத்து சோர்வடையச் செய்கிறார் அட்லி.

விளையாட்டுகள் வியாபாரம் ஆகியிருக்கும் அவலம், அடித்தட்டு மக்கள் விளையாட்டுகளில் புறக்கணிக்கப்படுகிற அரசியல் ஆகிய வழக்கமான விசயங்கள் சலிப்பூட்டுகின்றன.

விபத்துகள் திருமணங்கள் ஆகியன பெண்களின் திறமைகளையும் கனவுகளையும் முடக்கிவிடக் கூடாது, பழிக்குப் பழி என்று தொடராமல் எதிரியை மன்னித்து அவர் மகனுக்கே பயிற்சியாளராவது ஆகிய நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றை சட்டு புட்டுனு சொல்லி முடித்திருந்தால் அட்லிக்குப் பெருமையாக இருந்திருக்கும். ஆனால் அவர் சொதப்பியிருக்கிறார். விஜய் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

Related Posts