சினிமா செய்திகள்

அன்பறிவ் அடாவடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

தமிழ்த்திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் இரட்டையர்கள்.அன்புமணி அறிவுமணி ஆகிய இருவரும் இணைந்து அன்பறிவ் என்கிற பெயரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இப்போது பணியாற்றும் படங்களைப் பார்த்தாலே அதை உணரலாம்.

கமல்ஹாசனின் இந்தியன் 2, கமல் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் ஆகியோர் நடிக்கும் கல்கி 2898 ஏடி,ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன்,மணிரத்னம் கமல் இணையும் தக்லைஃப்,ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர கமல்ஹாசன் நடிக்கும் புதியபடமொன்றை இவர்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் இவர்களுடைய அண்மைக்கால நடவடிக்கைகள் இரசிக்கும்படியாக இல்லை என்று இவர்களை வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தினர் வருத்தப்படுகிறார்கள்.

அண்மையில் நடந்த ஓர் நிகழ்வு..

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தென்கோடியில் நடந்தது.அப்போது ரஜினிகாந்த் தங்குவதற்காக கன்னியாகுமரியில் விடுதி எடுத்திருந்தார்களாம். இயக்குநர் உட்பட மற்றோர் அனைவரும் நாகர்கோயிலில் தங்கி இருந்ததார்களாம்.

படப்பிடிப்புக்கு வந்த அன்பறிவ், எங்களுக்கும் ரஜினி தங்கியிருக்கும் விடுதியிலேயே அறை எடுக்கவேண்டும், அறையிலிருந்து பார்த்தால் கடல் முழுமையாகத் தெரியவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்களாம்.அதுமட்டுமின்றி, நீங்களாக ஏதாவதொரு அறையைப் பதிவு செய்துவிடக்கூடாது,அறை எடுக்கப் போகும்போதே எங்களுடைய உதவியாளரை உடன் கூட்டிப்போகவேண்டும், அவர்கள் அந்த அறையைப் பார்வையிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகே பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் செய்கிறார்க்ளே என்று தயாரிப்பு நிர்வாகத்தினர் புலம்பியபோதுதான், வேட்டையனில் மட்டும் இப்படிச் செய்யவில்லை எல்லாப் படங்களிலும் இப்படித்தான் செய்கிறார்கள்,கமல் படமென்றால் அவர் தங்குமிடத்தில்தான் இவர்களும் தங்கவேண்டுமாம் பிரபாஸ் படமென்றால் அவர் இருக்கும் விடுதியில்தான் இவர்களுக்கும் இடம் வேண்டும் என்று கேட்பார்கள் என்கிற தகவல்கள் வரத்தொடங்கினவாம்.

தங்குமிட வசதிகள் மட்டுமன்று பணியாற்றுமிடத்திலும் இவர்கள் சொல்கிறபடிதான் நடக்கவேண்டுமாம். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பின்போது மாலை ஐந்து மணிக்கு ஒரு காட்சி நிறைவடைந்துவிட்டதாம்.இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.அதற்குள் அந்த இன்னொரு காட்சியை எடுத்துவிடலாம் என்று மணிரத்னம் சொல்லியிருக்கிறார்.அக்காட்சியை எடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று எங்களுக்குத்தான் தெரியும் இவர் என்ன சொல்வது? எனச் சொல்லி அவர் சொன்னதைக் கண்டுகொள்ளவேயில்லை என்கிறார்கள்.

ஒரு நாளைக்கு சுமார் பத்து இலட்சம் சம்பளம் மற்றும் பல வசதிகள் செய்துகொடுத்து இவர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.ஆனால் இவர்கள் படக்குழுவினருடன் இணங்கிப் போகாமல் தங்கள் இஷ்டத்துக்குப் பணியாற்றுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் கவனித்த இவர்களுடைய நலம்விரும்பியொருவர், இப்படியெல்லாம் செய்யலாமா? ஒவ்வொரு படத்தயாரிப்பு நிறுவனமும் அதிருப்தி அடைந்து கொண்டே வந்தால் உங்கள் நிலை கவலைக்கிடமாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.அவரிடம் இவர்கள், சினிமாவில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் இப்போதுதான் நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும், இன்னும் சில வருடங்களில் வேறொருவர் வந்துவிட்டால் எங்களைக் கூப்பிட மாட்டார்கள்,அப்படி ஒரு நிலைவரும்போது பணிவாகப் போய் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம் இப்போது எங்கள் காலம் நாங்கள் கேட்பவை எல்லாம் கிடைக்கின்றன அனுபவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தெரியாமல் தப்பு செய்தால் திருத்தலாம் தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது? என்று சார்ந்தோர் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

Related Posts