ஜெயமோகன் மறுப்பு லிங்குசாமி கடுப்பு – மகாபாரதப் போர்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தி வாரியர்.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான அந்தப்படம் 2022 ஜூலையில் வெளியானது.
அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின் ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.அதுவும் சரியாக வரவில்லை என்ற பிறகு தற்போது நடிகராக அறிமுகமாகியிருக்கும் அதர்வா தம்பி ஆகாஷை வைத்து பையா 2 எடுக்கப்போவதாகச் சொன்னார்கள். அதிலும் முன்னேற்றமில்லை.
இப்போது அவர் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதி அதைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அக்கதையில் வரும் ஓரிரு கதாபாத்திரத்திங்களை முன்னிலைப் படுத்தி திரைக்கதை எழுத முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்காக எழுத்தாளர் ஜெயமோகனை அணுகிய லிங்குசாமி, தேவையை விவரித்து திரைக்கதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
ஜெயமோகனும் அதை ஏற்றுக்கொண்டு எழுதியிருக்கிறார்.
முழுமையாக எழுதிவிட்டதாகச் சொல்லி ஜெயமோகன் கொடுத்த திரைக்கதையைப் படித்துப் பார்த்த லிங்குசாமிக்கு அதில் நிறைவில்லையாம்.
அவருடைய நெருங்கிய நண்பர்களும் படித்திருக்கின்றனர். அவர்களுக்கும் திருப்தியில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் மீண்டும் ஜெயமோகனை அழைத்து, என்னென்ன தேவைகள் என்பதை விளக்கி மாற்றி எழுதித் தரச் சொன்னார்களாம்.
அவர்கள் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, என்னுடைய வெண்முரசு படியுங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாகவே அதில் எழுதியிருக்கிறேன்.அவற்றில் உங்களுக்கு என்னென்ன தேவையோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
ஜெயமோகனின் இந்தப் பதிலைக் கேட்டு லிங்குசாமி மற்றும் அவரது தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சி.
ஒருமுறை எழுதியதைத் தாண்டி மறுபடி எழுத மாட்டேன் என்று அவர் சொல்வார் என்பதைச் சற்றும் எதிர்பாராததால் வந்த அதிர்ச்சி அது என்கிறார்கள்.
அதன் விளைவாக, லிங்குசாமியின் குழுவினரே விவாதித்து திரைக்கதை எழுதும் வேலையில் இறங்கிவிட்டாரகளாம்.
இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட ஜெயமோகனும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
வெண்முரசுவிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் லிங்குசாமி ஏற்றுக்கொள்வார், உழைக்காமலே பெயரும் பொருளும் கிடைக்கும் என எண்ணிய எண்ணத்தில் இடி.
இப்போது படத்தில் பெயர் வருமா? அதற்காக எதிர்பார்தத தொகை கிடைக்குமா? என்கிற அதிர்ச்சி அவருக்கு என்கிறார்கள்.











