ஐ நோபடி – திரைப்பட விமர்சனம்
ஒரு வங்கியில் கொள்ளை நடக்கும் நேரத்தில் அங்கே இருக்கிறார் நாயகன் பிருத்விராஜ்.அவர் அங்கு போன காரணத்தை வெளியில் சொல்லமுடியாத நிலை.அதனால் கொள்ளை போன பணம் மொத்தமும் அவரிடம்தான் இருக்கிறது என காவல்துறை உட்பட எல்லோருக்கும் சந்தேகம்.அதனால் நாயகன் பிருதிவிராஜ் மற்றும் அவருடைய குடும்பத்துக்குப் பெரும் சிக்கல்கள்.அவற்றிலிருந்து மீண்டார்களா? அந்தப்பணம் எங்கே? அவர் ஏன் வங்கிக்குப் போனார்? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் ஐ நோபடி படம்.இதற்கு நான் யாருமில்லை என்று பொருள்.
நாயகனாக நடித்திருக்கும் பிருத்விராஜ் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.துப்பாக்கியோடு அவர் அறிமுகமாகும் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்படுத்துகிறார்.குடும்பம் குறித்து குமையும் காட்சிகளில் மேலும் நன்று.
பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கிறார் பார்வதி.யாரும் ஏற்கத்துணியாத வேடத்தை ஏற்றிருக்கிறார்.அதில் மிகச் சிறப்பாக நடித்துமிருக்கிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகான்,ஜேக்கப் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,முதலமைச்சராக நடித்திருக்கும் விஜயராகவன்,காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன்,வங்கிக்கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால்,பிரித்விராஜின் மூத்தமகளாக நடித்திருக்கும் ஜியா ஆகிய எல்லோரும் பொருத்தம்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் உழைப்பில்,சண்டைக்காட்சிகள் அனைத்தும் வியக்கும் இரகம்.அதற்கு நேர்மாறாக மற்ற காட்சிகள் அமைந்திருப்பது கவனிக்க வைக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை,காட்சிகளின் காலில் சக்கரம் கட்டிவிட்டிருக்கிறது.அவ்வளவு வேகத்தை உணர வைக்கிறது.
படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி,காட்சிகளின் வேகமும் குறையாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளும் மாறாமல் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
யானிக் பென்,கலை கிங்சன் மற்றும் அமித்ஜாலிபாஸ்டின் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு சண்டையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கவேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.அது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
சமீர் அப்துல் எழுத்தின் வீரியம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நிசாம்பசீர்.வங்கிக் கொள்ளைக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒருவரை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான திரைக்கதையை அமைத்து,தங்கள் நடிப்பின் மூலம் திரைக்கதை மேம்பாட்டிற்கு
உதவும் மிக மிகப் பொருத்தமான நாயகன் நாயகியைத் தேர்வு செய்து,மனித உணர்வுகளின் பல்வேறு அடுக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டி எனப்பல விசயங்களைச் செய்து அனைத்துத் தரப்பினரும் இரசிக்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– இளையவன்












