பிரேமலு – திரைப்பட விமர்சனம்
பான் இந்தியா படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தென்னிந்தியப்படமாக வந்திருக்கிறது பிரேமலு. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நஸ்லென் கேரளாக்காரர்.அவர் படிப்புக்காக தமிழ்நாட்டின் சேலத்துக்கு வருகிறார்.படிப்பை முடித்து அடுத்தகட்டமாக ஐதராபாத் செல்கிறார்.அங்கிருந்து ஒரு திருமணத்துக்காக தெலுங்கானா செல்கிறார்.அங்குதான் கதாநாயகியைச் சந்திக்கிறார். காதல் வருகிறது. அந்தக் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.
வழக்கமான காதல்கதைதானே என்று புறந்தள்ளிவிட முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.அதனாலேயே மலையாளம் தாண்டி தமிழ் மொழியிலும் குரல்மாற்றம் செய்து வெளியாகியிருக்கிறது.
பல படங்களில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் நஸ்லென்னுக்கு இந்தப்படத்தில் நாயகனாகப் பதவி உயர்வு.வயதுக்கேற்ற வேடம்.கலகலப்பு,கலக்கம்,சோகம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூடிய வேடம்.அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.
நாயகி மமிதாபைஜுவும் சில படங்களில் நாயகியின் தோழியாக நடித்தவர்தான். இந்தப்படத்தின் நாயகியாகியிருக்கிறார்.அலட்சியதொனி நிறைந்த அழகு.தனக்கு இணையாக வருபவர் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறவர்.அவர் எதிர்பார்க்கும் எந்தப் பண்பும் இல்லாத நாயகனுடன் பயணிக்க வேண்டிய வேடம்.தன் நடிப்பால் அதை மேலும் சிறப்பாக்கியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப்,வில்லன் ஷ்யாம் மோகன், நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக நண்பர்கள் சமீர் கான், அல்தாப் சலீம் ஆகிய அனைவருமே படத்தைக் கலகலப்பாக நகர்த்த உதவியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜ்மல்பாபு, சென்னை,ஐதராபாத் போன்ற பெருநகரங்களையும் ஆந்திர,கேரள கிராமங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.திரைக்கதையின் ஓட்டத்துக்கு அவருடைய காட்சிகள் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன.
விஷ்ணுவிஜய்யின் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் காட்சிகளின் தன்மைக்கு உரமூட்டியிருக்கிறார்.
எவ்விடத்திலும் சலிப்புத்தட்டாமல் படத்தைக் கொண்டுபோகவேண்டும் என்று மெனக்கெட்டு சாதித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆகாஷ்ஜோசப்வர்கீஸ்.
கிரண்ஜோஷியுடன் இணைந்து எழுதிய கதை,திரைக்கதை எழுதி தனியாக இயக்கியிருக்கிறார் கிரிஷ்.ஏ.டி. நாம் பார்த்துப் பழகிய காதல் கதையை புதிதாகப் பார்க்கிற மாதிரி இரசிக்க வைத்திருப்பது அவருடைய பலம். நாயகி நாயகனிடம் காதல் சொல்லும் காட்சி அரங்கம் அதிர்கிறது.இந்த இடத்தில் அரங்கம் அதிரவேண்டும் என்று சொல்லியடித்தது போல் இருக்கிறது.
மலையாளப்படத்துக்கு தெலுங்கில் தலைப்பு வைத்து எல்லோரையும் இரசிக்க வைத்திருக்கும் இந்தப்படம் படைப்பாளிகளுக்குப் புதிய வாசல்களைத் திறக்கக்கூடும்.
– தனா











