Uncategorized சினிமா செய்திகள்

மில்லியன் டாலர் நிறுவனத்துக்கு பெரும் சோதனை – விவரம்

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா.இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ்ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா,நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் சேத்தன்,பரிதாபங்கள் கோபி,இஸ்மத் பானு,சுதர்சன் காந்தி,செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை,மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தயாரித்திருக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்த குட்நைட்,லவ்வர்,டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய எல்லாப் படங்களும் வெற்றிப் படங்கள்.

இப்போது தயாராகியிருக்கும் அன்பே டயானா படமும் வெளியீட்டுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்,அப்படத்துக்கு ஒரு கடும்சோதனை ஏற்பட்டுள்ளது.

அது என்ன?

இப்படத்தை ஜூலை 17 அன்று வெளியிட சில வாரங்களுக்கு முன்பே முடிவுசெய்து அதற்குத்தக்க வேலைகள் செய்துவந்தார்கள்.சுமார் இருநூறு முதல் முன்னூறு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.இப்போது திடீரென விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள எல்லாத் திரையரங்குகளிலும் வெளியிடவேண்டும் என்கிற முனைப்பில் அந்தப்படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இதனால் வெளியான ஆறுநாட்களிலேயே அன்பே டயானா படத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம் திரையரங்குக்காரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால்,அன்பே டயானா படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.மில்லியன் டாலர் நிறுவனத்தின் முந்தைய படங்கள் போலவே இந்தப்படமும் ஐம்பது நாள் நூறுநாள் வரை ஓடும் என்று பெரும் நம்பிக்கையில் இருந்தவர்களுக்குப் பேரிடியாக ஜனநாயகன் வருகிறது.

இதனால்,ஆறு நாட்களில் இப்படத்தை எடுத்தாக வேண்டுமே என்கிற கலக்கத்தில் இருக்கிறார்கள்.இதனால் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸுக்கு பெரும் சோதனை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

வியாழனன்று வெளியாகும் ஜனநாயகன் ஒருவேளை சரியில்லை என்றால்,ஓரிரு நாட்களிலேயே இந்தப் படத்தைத் திரும்பவும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வந்துவிடுவார்கள்.

அதுபோன்ற சாதனையை அன்பே டயானா படைக்குமா? அல்லது சோதனைதானா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

Related Posts