சினிமா செய்திகள்

ஜனநாயகன் தயாரிப்பாளர் அடாவடி – விக்கித்து நிற்கும் விநியோகஸ்தர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதாபைஜு உட்பட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் எப்போது வரும்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

அந்தப்படம் இணையதளத்தில் கசிந்து அதை சுமார் ஒன்றரை கோடி பேர் பார்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.அதனால் அந்தப்படத்தை எப்போதுமே வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.

அதனால்,அந்தத் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நட்டத்தைச் சரிசெய்வதற்காகவே அவருக்கு,தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது என்கிற விமர்சனங்களும் வெளியாகின.

இந்நிலையில்,திடீரென ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க ஒப்புக்கொண்டது.அதனால்,அப்படம் ஜுலை 23 அன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவின.

அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஆனாலும்,அப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த விநியோகஸ்தர்கள் பேரரதிர்ச்சி அடையும் வகையில் சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அவை என்ன?

அண்மையில் சென்னை வந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்நாராயணா,விநியோகஸ்தர்களை அழைத்திருக்கிறார்.

ஆர்வமாகச் சென்ற அவர்களிடம்,இந்தப்படத்தை எம்ஜி அடிப்படையில் வெளியிட ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள்.அதை இரத்து செய்துவிட்டு டிஸ்டிரிபியூசன் அடிப்படையில் என புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.அதேசமயம் முன்பு சொன்ன தொகையை அப்படியே முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும்.அதை முன்பணமாக வைத்துக் கொள்வோம்.படம் ஓடவில்லையென்றால் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.அதோடு,டிஸ்டிரிபியூசன் செய்வதற்கான தரகுத்தொகை மிகவும் குறைவான அளவில் அதாவது சுமார் எட்டுவிழுக்காடு மட்டுமே தரமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்தும் ஆலோசனையாக இல்லாமல் உத்தரவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு,இப்படம் சனவரியில் வெளியாகும் என்று நம்பி பலகோடிகள் முன்பணமாகக் கொடுக்கப்பட்டிருந்தன.ஏழு மாதங்களுக்கு மேல் தாமதமானதால் அதற்கு வட்டியே சில கோடிகள் கட்டியிருக்கிறார்கள்.அதுகுறித்து ஒப்பந்தத்திலேயே இருந்தும்,அப்படி எல்லாம் நீங்கள் கேட்கிற வட்டியை தரமுடியாது,வேண்டுமானால் இவ்வளவு தருகிறோம் என வங்கி வட்டிக்கும் குறைவான ஒரு தொகை சொல்லியிருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்டால்,ஒவ்வொரு விநியோகஸ்தரும் பல கோடி நட்டமடையும் சூழல்.இதனால் விக்கித்துப் போன விநியோகஸ்தர்கள்,தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தையைத் தொடர முயன்றபோது,இனிமேல் இது தொடர்பாக என்னிடம் யாரும் பேசக்கூடாது,என்னுடைய அலுவலகத்திலிருந்து இவர் வருவார் அவருடன் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம்.

இதனால்,பலகோடி பணம் கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கும் விநியோகஸ்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார்களாம்.

இப்போது திரையுலகெங்கும் இதுதான் பெரும் பேசுபொருளாக இருக்கிறது.

ஜனநாயகன் விநியோகஸ்தர்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

Related Posts