October 13, 2026
சினிமா செய்திகள்

கண்ணன்ரவி மகன் கலப்புதிருமணம் – விவரம்

வெளியான ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில்,நட்டி நடித்த டிஎன்2026 உள்ளிட்ட படங்கள் மற்றும் தயாரிப்பில் இருக்கும் பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் கண்ணன்ரவி.துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று அறியப்பட்ட இவர்,தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்தவர்.

இவர் இப்போது தமிழ்நாட்டுக்கே திரும்பவந்து திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களைச் செய்துவருகிறார்.

இவருடைய மகன் தீபக்ரவி.கண்ணன்ரவி தயாரிக்கும் திரைப்படங்களில் இணைதயாரிப்பாளர் என்று இவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது.

இந்த தீபக்ரவிக்கும்,திமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேத்தியும்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும் திருமணம் உறுதியாகியிருக்கிறது.

இவர்களுடைய திருமண உறுதியேற்பு நிகழ்வு,ஜூன் 12 அன்று வேலூர் காட்பாடியிலுள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

துரைமுருகன்,கண்ணன்ரவி ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மனமுவந்து இந்தத் திருமணத்தை நடத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

திருமண உறுதியேற்பு நிகழ்வுக்கு,மிக நெருங்கிய உறவினர்களுக்கும் திமுகவின் முன்னணியினருக்கும் மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டுவருகிறது.

திருமணத்தை பெரிய அளவில் செய்துகொள்ளலாம்.நிச்சயத்தை எளிமையாக நடத்திவிடலாம் என்று முடிவுசெய்து இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்த்திரைப்படத்துறைக்குள் நுழைந்தவுடனே பெரிதாகப் பேசப்பட்டவர் கண்ணன்ரவி.ஒரேநேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால்,ஆரவாரமாகத் தொடங்கப்பட்ட அந்தப்படங்கள் எல்லாம் அந்தரத்தில் நிற்கின்றன.அப்பட வேலைகள் தொடர,பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம்,பெரிய வெற்றி பெற்ற தலைவர் தம்பி தலைமையில் படத்தில் பணியாற்றியதற்கு உரிய ஊதியத்தைக் கூட அதன் கதாநாயகன் ஜீவாவுக்கு இன்றுவரை தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இவரை நம்பி படம் தொடங்கியவர்கள் எல்லாம் தவித்துப்போயிருக்கிறார்கள்.அவர்களுக்கு,இந்த திருமண நிகழ்வு நடப்பதும்,செல்வாக்கு மிக்க தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரோடு சம்பந்தம் செய்யவிருப்பதும் மேற்கொண்டு பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே,முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பினாமியாக கண்ணன்ரவி இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகள் உலவிக்கொண்டிருக்கின்றன.அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சம்பந்தம் நடைபெறுகிறது.

எது எப்படியிருந்தாலும்,தொடங்கிய படங்களை விரைந்து முடிக்க உண்டான வேலைகளை அவர் செய்தால் போதுமென்று ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய குடும்பத்தில் நல்லநிகழ்வு நடக்கும் நேரத்தில் நமக்கும் நல்லது நடந்துவிடாதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் நல்லது.

– ஸ்ரீதர்

Related Posts