ஜெயிலர் 2 படக்குழுவின் முடிவு – விஜய்சேதுபதி வருத்தம்
2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெயிலர்.சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்லவெற்றி பெரியவசூல் என்பதால் அதன் இரண்டாம்பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயிலர் 2 என்கிற பெயரில் உருவாகிவரும் அப்படத்தில்,முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன்,மிர்னா,யோகிபாபு, ஷிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரது கதாபாத்திரம் இந்தப் பாகத்திலும் இடம்பெறுகிறது என்கிறார்கள்.இவர்கள் தவிர்த்து புதிதாக வித்யா பாலன்,விஜய்சேதுபதி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமின்றி,ஜெயிலர் 2 படத்தில் இந்திநடிகர் ஷாருக்கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார்.பின்னர் வில்கிக் கொண்டார்.அதன்பின் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க படக்குழு முயன்றது.அது எதுவும் சரியாக அமையவில்லை.
இந்நிலையில்,ஏப்ரல் 21 ஆம் தேதி ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.
ஆனால்,அதன்பின் மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
ஏன்?
இப்போது இந்தி நடிகர் ஹிருத்திக்ரோசன் இப்படத்தில் நடிக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.சுமார் எட்டுநாட்கள் அவரை வைத்துப் படப்பிடிப்பு நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.அதுமட்டுமின்றி ஏற்கெனவே எடுத்த சில காட்சிகளை சற்று மேம்படுத்தி மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள்.இதனால் இன்னும் கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இதனால்,வட இந்தியாவில் இந்தப்படத்துக்கு இன்னும் முக்கியத்துவம் கிடைக்கும் என்கிற நேர்மறை அம்சம் இருக்கிறது.இது வியாபார ரீதியாக தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்லது நடக்கக்கூடிய நிகழ்வு.
அதேசமயம்,ஒரு எதிர்மறை நிகழ்வு நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஹிருத்திக்ரோசனை வைத்து எடுத்த காட்சிகளின் நீளம் திட்டமிட்டதைவிட சற்றுக் கூடுதலாக வந்துவிட்டதாம்.அவற்றில் தேவையான நேரத்துக்குச் சுருக்கிக் கொள்ளலாம் என்கிற முடிவை எடுக்காமல் அவை அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன எனவே அவற்றை அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்படியானால்,மொத்த நீளம் அதிகமாக இருக்கும் அப்படி இருக்கக்கூடாது என்கிற கருத்து வந்திருக்கிறது.இதை அனைவரும் ஒப்புக்கொண்டதால் ஏற்கெனவே எடுத்தவற்றில் சிலவற்றை நீக்கிவிடலாம் எனும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.
இந்த முடிவால் கடும் மனவருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் விஜய்சேதுபதி என்று சொல்லப்படுகிறது.அவருக்கு ஏன் மனவருத்தம்?
ஹிருத்திக்ரோசனின் காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விஜய்சேதுபதி நடித்த காட்சிகளைக் குறைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையறிந்த விஜய்சேதுபதி,வரிசையாக நிறைய வேலைகள் வைத்திருக்கிற நேரத்திலும் இவர்கள் கேட்டார்கள் என்பதற்காக நடித்தேன்.இப்போது அவற்றைக் குறைத்திருக்கிறார்களே? என்று நெருங்கியவர்களிடம் மிகவும் வருத்தப்பட்டார் என்று சொல்கிறார்கள்.












