விமர்சனம்

கான்சிட்டி – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன்.

அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே போகிறார்கள்.போனவர்கள் மீண்டும் திரும்ப வருகிறார்கள். மீண்டும் மோசடி செய்கிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் கான்சிட்டி.

எதிர்மறை நாயகனாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அர்ஜூன்தாஸ் நேர்மறை வேடத்தில் நடிக்கிறாரே என்று பார்த்தால் போகப்போக அவர் செய்யும் செயல்கள் அடப்பாவி இரகமாக இருக்கின்றன.அந்த வேடத்தை நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

அன்னாபென், வடிவுக்கரசி,யோகிபாபு,சிறுவன் அகிலன் ஆகியோரை சேர்த்துப் பார்க்கும்போது நல்லதொரு குடும்பம் போல் தெரிகிறது. காட்சிகள் நகர நகர ஒவ்வொருவர் உண்மை முகமும் வெளியாகி திடுக்கிட வைக்கிறது.அதிலும் வடிவுக்கரசியின் வேடமும் நடிப்பும் சிறப்பு.

அவர்களும் அந்த அளவு பொருத்தமாக நடித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

பொன்வண்ணன்,அருள்தாஸ்,தம்பிராமையா,விடிவிகணேஷ்,ராதாரவி,இமான் அண்ணாச்சி,ரமேஷ்திலக்,நந்தகோபால்,மொய்தீன்குமார் என படத்தில் நிறைய நடிகர்கள்.ஒவ்வொருவரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அரவிந்த் விஸவநாதனின் ஒளிப்பதிவில், காட்சிகளில் தெளிவு திரைக்கதையோட்டத்துக்கேற்ற ஒளியமைப்பு.

ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையும் தாழ்வில்லை.

எழுதி இயக்கியிருக்கும் ஹரீஷ்துரைராஜ்,அர்ஜூன்தாஸை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் அதேசமயம் அவருடைய பலங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து களமிறங்கியிருக்கிறார்.

அடுத்தவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்,அரசாங்க நிறுவனத்தில் எப்படி மோசடி செய்யலாம் (மின்வாரியத்தில் பணம் எடுப்பதெல்லாம் பகீர் இரகம்),தனியாக இல்லாமல் கூட்டுச் சேர்ந்து இயங்கினால் என்னென்ன செய்யலாம்? அதோடு அந்தக் கூட்டணியில் பெண்கள் மற்றும் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டால் எந்தெந்த வகையில் பயன்தரும் என்கிற பெரிய பாடத்தையேநடத்தியிருக்கிறார்.

எல்லாவற்றையும் செய்துவிட்டு,அதாவது படம் முழுக்க இரத்தம் தெறிக்கத் தெறிக்க வன்முறைக் காட்சிகளை வைத்துவிட்டு படத்தின் இறுதியில் வன்முறை வேண்டாம் அகிம்சையே சிறந்தது என கருத்துச் சொல்வது போல,இந்தப்படத்தில்,நாம் உண்மையாக உழைத்துச் சேர்க்கும் படம்தான் நல்லது என்கிற கருத்தை உணர வைத்திருக்கிறார்.

– கதிரோன்

Related Posts