September 24, 2026
Uncategorized சினிமா செய்திகள்

டாக்ஸிக் தமிழ்நாடு வியாபாரம் முடிந்தது – விவரம்

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு யாஷ் நடித்திருக்கும் படம் டாக்ஸிக்.இந்தப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.நயன்தாரா,கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகவும் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்று செய்யப்பட்டும் வெளியாகவிருக்கிறது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.ஆகஸ்ட் 8 அன்று வெளியான இப்படத்தின் முன்னோட்டம் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த முன்னோட்டத்தின் மூலம், பிரம்மாண்டமான ஆக்‌சன்,காதல்,அதிகாரத்தின் மீதான பேராசை,துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையைக் கொண்ட படமாக இது உருவாகியிருப்பது புலப்படுகிறது.

இப்படத்தில்,அப்பா,மகன் ஆகிய இருவேடங்களில் ராயா மற்றும் டிக்கெட் ஆகிய பெயர்களில் நடித்திருக்கும் அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு இடம்பெற்றுள்ளது.பிரம்மாண்டமான கேங்ஸ்டர் உலகிற்கு ஒரு வலுவான உணர்வுபூர்வமான அடித்தளத்தை வழங்குகிறது.அதேபோல்,நயன்தாரா,கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் மோதல்களின் வலையையும் முன்னோட்டம் அறிமுகப்படுத்துகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ்,தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காட்சி அணுகுமுறையின் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ஒரு ஆழமான மற்றும் கணிக்க முடியாத உலகத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற கடும் போட்டி நிலவியது.

கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ஜனநாயகன் படத்தின் விநியோகஸ்தர்களுக்கே இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் கொடுத்திருக்கிறார்களாம்.

அதற்குக் காரணம்,அந்தப்படத்தை வெளியிட்டதில் அனைத்து விநியோகஸ்தர்களும் பத்து முதல் இருபது விழுக்காடு நட்டத்தைச் சந்தித்திருக்கிறார்களாம்.அதனால்,இந்தப்படத்தை அவர்களுக்கே கொடுப்பதென முடிவானதாம்.

வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகள் சீனு என்பவருக்கும்,திருச்சி,மதுரை,சேலம் ஆகிய மூன்று பகுதிகள் ஃபைவ் ஸ்டார் செந்தில் நாராயணசாமி ஆகியோருக்கும் கோவை பகுதி மன்னார் என்பவருக்கும் திருநெல்வேலி பிரதாப் என்பவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

ஜனநாயகன் சென்னை உரிமையைப் பெற்ற கற்பக விநாயகா நிறுவனம் மட்டும் அந்தப்பட்டியலில் இல்லை.அதற்குப் பதிலாக ஸ்வரூப்ரெட்டி பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மொத்த விலை சுமார் அறுபது கோடி என்கிறார்கள்.இதை பகுதிக்குத் தக்க பிரித்து ஒப்பந்தம் போடவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts