டிசி – திரைப்பட விமர்சனம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் டிசி.அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.இவர்கள் இருவருடைய படங்களுமே இரத்தம் தெறிக்கும் வன்முறைப் படங்கள்தாம்.இருவரும் இணைந்தால் கேட்கவும் வேண்டுமோ? காட்சிக்குக் காட்சி, அடிதடி குத்து வெட்டு கொலை இரத்தம் என்றே படம் போகிறது.
இவ்வளவு வன்முறை இருக்கவேண்டுமென்றால் அதற்கேற்ற ஒரு கதை வேண்டுமே?
இருக்கிறது.
பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவரை அநியாயமாகக் கொலை செய்கிறார் ஒரு காவல்துறை.அவரைக் கொல்கிறார் நாயகன்.அதன்பின் அவர் தலைமறைவாகிறார்.அங்கு ஒரு பாடகியைச் சந்திக்கிறார்.அவருடன் நேசம் கொள்கிறார்.அவரையும் காவல்துறை கொன்றுவிடுகிறது.அதன்பின் ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்திக்கிறார்.அந்தத் தொழில் அவர் விரும்பாமல் சிக்கிக் கொண்ட தொழில் எனும்போதே அவர் ஒருவராலோ பலராலோ பாதிக்கப்பட்டவர் என்பது புரிந்துவிடும்.அவரும் இவரும் இணையும்போது காவல்துறை ஒட்டுமொத்த எதிரியாகிறது.அவர்கள் துரத்த,இவர்கள் ஓட.. இதுதான் படத்தின் கதை.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் லோகேஷ் கனகராஜ்,அறிமுகப்படம் என்பதால் எச்சரிக்கையாக இந்த வேடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.அவர் எப்போதும் இருப்பதுபோல் இருந்தால் போதும்.அதனால்,படத்தில் அவருக்கு நற்பெயர்.முதல்படம் போலவே தெரியவில்லை என்று பாராட்டுகள் பெறுகிறார்.
பாடகியாக நடித்திருக்கும் சஞ்சனா வரும் காட்சிகள் கொஞ்சம் மென்மையாக அமைந்திருக்கின்றன.அவர் கொஞ்ச நேரத்திலேயே இல்லாமல் போய் ஏமாற்றமளிக்கிறார்.
கதையின் தலைப்பில் இருக்கும் சி என்பது சந்திரா எனும் பெயரின் ஆங்கில முதலெழுத்து.இந்த வேடத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகி வாமிகா கபி,அழகான அதிரடிக்காரியாக இருக்கிறார்.அவர் வரும் காட்சிகள் பெண்மையின் ஆண்மையை வெளிப்படுத்தும் காட்சிகள்.தலைப்பில் உள்ள டி என்பது நாயகன் கதாபாத்திரத்தின் பெயரான தேவதாஸ் எனும் பெயரின் ஆங்கில முதலெழுத்து.
கஸ்தூரிராஜா,தலைவாசல் விஜய்,கிரிஷ் தயாள்,அவினாஷ் ரகுதேவன் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.எல்லோரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
முகேஷ்ஜியின் ஒளிப்பதிவு,ஆங்கிலப் படங்களுக்கு நிகராக என்று சொல்வார்களே அப்படி அமைந்திருக்கிறது.ஆனால் அவை அனைத்தும் வன்முறைகளுக்குச் சாமரம் வீசுவதாகவே இருக்கிறது.
அனிருத்தின் இசை படத்துக்குப் பெரும் பாதுகாப்பாக இருக்கிறது.காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு அவருடைய பின்னணி இசை பெரும் எழுச்சியை ஊட்டி அதை அப்படியே பார்வையாளர்களுக்கும் கடத்தியிருக்கிறது.
ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு,காட்சிகள் திரும்பத் திரும்ப ஒரேமாதிரி இருப்பதாக ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது.
பி.சி.ஸ்டண்ட்ஸ் சண்டைப்பயிற்சியில் மனித உயிர்களை கொத்துபரோட்டா போல் கொத்தியெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.அதிகாரம் அடக்குமுறை ஆகியனவற்றிற்கெதிரான அடங்காத கோபத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்.அந்த ஆவேசத்தைக் காதால் கேட்கவோ,கற்பனை செய்து பார்க்கவோ கூட இயலாது எனும்போது காட்சிகளாக்கிக் கண்முன்னே வைக்கிறார்.தாங்கமுடியவில்லை.
– இளையவன்












