சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது கராத்தே பாபு வெளியீடு – ஏன்?

டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவிமோகன் நாயகனாக நடிக்கும் படம் கராத்தே பாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும்,இப்படத்தில்,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.இயக்குநர் ரத்ன குமார் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோர் திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க அரசியல்கதையை மையமாகக் கொண்ட படம் என்பது படத்தின் குறுமுன்னோட்டம் வெளியானபோது உறுதியானது.அரசியல் படமென்பதால் அந்த முன்னோட்டம் வெளியான நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின்,படத்தில் இடம்பெறும் ராசாதி ராசா என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.எல்லாக் கட்சிக்காரர்களும் அந்தப்பாடலை தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப்படம்,ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்போது அப்படத்தின் வெளியீட்டை ஒரு மாதத்துக்கும் மேல் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஏன்?

கேஜிஎஃப் புகழ் யாஷ் நடித்திருக்கும் டாக்ஸிக் படம்,கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியாகவிருக்கிறது.அப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்துக்கே திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் கராத்தே பாபு படத்தை வெளியிடவேண்டாம் என்கிற முடிவை படக்குழு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.இப்போது படம் பார்த்தவர்கள்,படம் மிகவும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.எப்போது வந்தாலும் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருப்பதாகப் படக்குழுவினர் சொல்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது டாக்ஸிக் படம் வருகிற நேரத்தில் திரையரங்கு ஒதுக்கீடு குறைவாக இருக்கும் எனும்போது அதைத் தவிர்த்து தனியாகக் களமிறங்கலாம் என்று திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கேட்டுக்கொண்டார்களாம்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று படவெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

புதியவெளியீட்டுத் தேதி அக்டோபர் ஒன்று.அந்தத் தேதியில் படத்தை வெளியிட்டால்,அக்டோபர் 15 இல் ஜெயிலர் 2 வெளியாகும்வரை
எல்லாத் திரையரங்குகளிலும் கராத்தேபாபுவை திரையிடலாம் என்கிற எண்ணத்தில் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts