பிரதர் படம் தள்ளிப்போகிறதா? – என்ன நடந்தது?
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள படம் பிரதர்.ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்கா தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம்,இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தீபாவளி நாளில் குடும்பத்தோடு பார்த்துக் கொண்டாடக்கூடிய படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் மட்டுமின்றி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் திரையிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றிருக்கிறது மும்பையைச் சேர்ந்த கோல்டுமைன்ஸ் எனும் நிறுவனம்.
தங்களுக்கு 21 கோடி ரூபாய் பணம் தரவேண்டுமென்றும் அப்படத்தைக் கொடுக்காமல் பட வெளியீட்டுக்கான வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கூறி தடையாணை பெற்றிருக்கிறார்கள்.
இதனால் இப்படம் தீபாவளியன்று வெளியாகாது என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில்,இப்படத்தின் தயாரிப்பாளர் மும்பை சென்று அந்நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அந்நிறுவனம் கொடுத்த தொகை சுமார் ஏழு கோடி என்றும் அதற்கான வட்டிக்கணக்குப் போட்டு சுமார் 21 கோடி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.
இதனால் வாங்கிய தொகையை மொத்தமாகக் கொடுத்துவிடுகிறோம் வட்டியைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் 21 கோடி தரவேண்டாம் 11 கோடி கொடுத்துவிடுங்கள் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என மும்பை நிறுவனம் சொல்லியிருக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் சுமுக முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்றும் அதனால் தீபாவளி நாளில் படம் வெளியாகிவிடுமென்றும் படக்குழு தரப்பில் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம்,பேச்சுவார்த்தையின் போது கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தொகையை முழுமையாகக் கொடுத்தால்தான் நீதிமன்றத்தில் சொல்வோம் என்று மும்பை நிறுவனம் சொல்லியிருக்கிறது.
அதனால் இன்று பேசிய பணத்தைக் கொடுத்தாக வேண்டும்.அதன்பின் நீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்து தடை விலக்கி உத்தரவு பெற்றாக வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் வேகமாகவும் சரியாகவும் நடந்துவிட்டால் படம் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்றும் அவற்றில் நடைமுறைச் சிக்கல் உட்பட ஏதேனும் எதிர்பாரா சிக்கல் ஏற்பட்டால் படவெளியீடு தள்ளிப்போகும் என்றும் சொல்கிறார்கள்.
நல்லதே நடக்கட்டும்.