சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்தபட படப்பிடிப்பு – இற்றைத்தகவல்

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது ரஜினியின் 173 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அவர் அப்படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்.அதன்பின் ரஜினி 173 படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில்,அதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,‘ரஜினி 173’ படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பினை சனவரி 3,2026 அன்று காலை 11 மணியளவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.அதில்,டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் சொன்னார்கள்.

ஆனால் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.மாறாக மறுபடியும் முதல்ல இருந்து என்பதுபோல் இயக்குநர் மாற்றம் இருக்கும் என்கிற தகவல் உலவிக்கொண்டிருந்தது.

இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.எனினும் இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி இயக்கவில்லை,டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்பது உறுதியாகிவிட்டதாம்.

திரைக்கதையை இறுதி செய்து உத்தேசமாகப் படப்பிடிப்பு தேதிகளைக் கூட முடிவு செய்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது.

இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப்பணி நிறைவடைவதற்குள் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு இயக்குநர் குழு தயாராகிவிடுமாம்.

அதன்பின்,படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிடும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ஒன்றுக்கு இரண்டுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு அதன்படி நடக்கவில்லை.எனவே,இம்முறை எல்லாம் தயாரான பின்பு அறிவிப்பை வெளியிடலாம் என்பது ராஜ்கமல் நிறுவனத்தின் திட்டம் என்கிறார்கள்.

இப்போது அந்நிறுவனம் தயாரிக்கும் சேயோன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.சிவகார்த்திகேயன் பாக்யஶ்ரீபோர்ஸ் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதோடு ரஜினி படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது என்பதால் அந்நிறுவனம் மிகவும் சுறுசுறுப்படைந்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts