நடுங்க வைக்கும் படம் நயமான காதலும் உண்டு – இயக்குநர் அகமத் பேட்டி
வாமனன்,என்றென்றும் புன்னகை,மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் இறைவன். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் முதல் பார்வை சனவரி 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர்.
காதல்கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் அகமத், இந்தப்படத்தை க்ரைம் த்ரில்லர் வகையில் எடுத்துள்ளார்.

director ahmed
படம் குறித்து இயக்குநர் அகமத் பகிர்ந்து கொண்டதாவது….
ஒரே மாதிரியான படங்களைத் தொடர்ந்து எடுக்காமல் வெவ்வேறு பாணியிலான படங்களை எடுக்க வேண்டும் என்று தான் இந்த சைக்கோ க்ரைம் ஜானரை தேர்வு செய்தேன்.
சைக்கோ ஜானர் படத்தை எடுக்கிறேன் என்றால் அந்த ஜானரில் என் படம் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அதற்கான காட்சிகளைப் படத்தில் வைத்திருக்கிறேன்.
படம் முழுவதும் நடுங்க வைக்கும் காட்சிகள் தான் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம், இதில் அழகான காதல் கதை இருக்கிறது. ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடி வெற்றி இணையர் என்பதால் அவர்களுக்கான காதல் கதை இரசிகர்களைக் கவரக்கூடியதாக இருக்க வேண்டும், அதே சமயம் படத்தின் ஜானரை விட்டும் விலகக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என்னுடைய முந்தைய படங்களைப் போல் இதிலும் இரண்டு இனிமையான பாடல்கள் இருக்கின்றன.
நான் ஜெயம் ரவியுடன் இரண்டு படங்கள் செய்கிறேன், அதில் ஒன்று தான் ‘இறைவன்’. ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் பல படங்களில் நடித்து விட்டார்,விண்வெளிக்குக் கூட அவர் சென்றுவிட்டார். அப்படி ஒரு நடிகரை வைத்து நான் படம் பண்ணும் போது, அந்தக் கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும், அவருக்கும், அவருடைய இரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய படமாக இருக்க வேண்டும், அப்போது தான் அவருக்கும் என்னுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வம் ஏற்படும். அதனால் தான் இந்த ஜானர் கதையை எழுதினேன். அவருக்கு மட்டும் அல்ல, நயன்தாராவுக்கும் இந்தக் கதை பிடித்ததால் தான் அவரும் நடிக்கச் சம்மதித்தார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக எழுதியிருக்கிறேன், நடிகர்களின் நடிப்பை முன்னிலைப்படுத்தி தான் திரைக்கதை பயணிக்கும்.இரசிகர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.











