September 12, 2026
விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

வளர்ப்புமகள் மமிதாபைஜுவை இராணுவ அதிகாரியாக்க முயல்கிறார் நாயகன் விஜய்.அந்தப் பயணத்தில் எதிர்பாராமல் ஓர் எதிரையைச் சந்திக்க நேருகிறது.அதனால் பல சிக்கல்கள்.அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய்,வழக்கம்போல் நடித்திருக்கிறார்.சண்டை செய்திருக்கிறார்.நடனம் ஆடியிருக்கிறார்.அவ்வப்போது குத்து வசனங்கள் பேசியிருக்கிறார்.

நாயகனின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதாபைஜு நல்ல தேர்வு.அச்சத்தில் உறையும் போதும் ஆர்ப்பரித்து எழும்போதும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனுக்கு இணையராக வரும் பூஜாஹெக்டேவுக்கு அதிக வேலையில்லை.ஒரு பாடல், சில காட்சிகள் என்று அவரைச் சுருக்கிவிட்டார்கள்.

எதிர்மறை நாயகனாக நடித்திருக்கும் இந்திநடிகர் பாபிதியோல்,ஏற்றுக்கொண்ட வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.

சிறியவேடத்தில் நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதி பிரகாஷ் ராஜ்,மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் பிரியாமணி,அறிவியலாளராக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில்,நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி,தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய உழைப்பைத் தாண்டி கணினி வரைகலைக்காட்சிகள் கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன.

அனிருத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை கூடுதலாக அமைந்து நெளியவைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதிப் ஈ.ராகவ்,வேலை பார்த்தாரா?இல்லை வேலையை விஜய்யிடமே விட்டுவிட்டாரா? என்று தெரியவில்லை.படத்தின் நிளத்தை ஒருமணிநேரம் குறைத்திருந்தாலும் குற்றமில்லை.

தெலுங்குத் திரைப்படமான பகவந்த் கேசரியின் மொழிமாற்றுத்தான் இந்தப்படம்.அந்தப்படத்தில் பார்த்து இரசிக்க முடிந்த காட்சிகளைக்கூட இரசிக்கமுடியாமல் செய்ததுதான் இவர்கள் செய்திருக்கும் மாற்றம்.

இயக்குநர் அ.வினோத் படங்கள் என்றால்,நம்பிப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை விஜய் எனும் சுத்தியல் கொண்டு சுக்குநூறாக உடைத்திருக்கிறார்.நாயகனின் தேவைக்கேற்ப அவரைப் புகழ்பாடும் காட்சிகள்,வசனங்கள்,சண்டைகள்,பாடல்கள் ஆகிய அனைத்தையும் அமைத்திருக்கிறார்.அவையும் பொருந்தாமல் அமைந்து இம்சிக்கின்றன.

எதிர்மறை நாயகனுக்கு வைத்திருக்கும் முன்கதை,சண்டைக்காட்சிகளில் அளவுக்கதிகமான கணினி வரைகலை,உலகெங்கும் சுற்றும் திரைக்கதை ஆகிய அனைத்தும் படத்துக்குப் பலவீனமாக அமைந்திருக்கின்றன.

விஜய் இனி நடிக்கமாட்டாரா? என்று வருந்துவதற்குப் பதில் இனி நடிக்காமல் இருப்பதே திரைத்துறைக்கு நல்லது என்று நினைக்கவைத்துவிட்டார்கள்.

– இளையவன்

Related Posts