October 22, 2026
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது அப்பா குட்டி – ஏன்?

விஜய் ஆண்டனி நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அப்பா குட்டி.இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார்.இவர்களுடன்,பேபி லிதன்யா,பகவதி பெருமாள் (பக்ஸ்),ஹரிப்பிரியா இசை,அருவி மதன்,சித்ரா லட்சுமணன்,ஸ்ரீஜாரவி,வேட்டை முத்துக்குமார்,ஜென்சன் திவாகர்,முருகானந்தம்,மூணார் ரமேஷ்,லிஸ்ஸி ஆண்டனி,குமார் நடராஜன், விஜயன்,பிரவீணா,ஹரிதா,ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை மற்றும் படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்திருக்கிறார்.இப்படத்துக்கு ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கலை இயக்கத்தை ஏ.ராஜாவும் சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கையாண்டிருக்கிறார்கள்.

தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான அப்பா குட்டியில் அதிரடி ஆக்சனும் இருக்கிறதாம்.

இப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.அதன்பின் இப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போதுவரை அதிகாரப்பூர்வ தகவல் அதுதான்.அதேநேரம்,இப்படம் நவம்பர் 6 அன்று வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

ஏன்?

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று,சூர்யா நடித்துள்ள சீன்,நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2,யாஷ்,சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இராமாயணா ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அதேசமயம்,இவற்றில் மூக்குத்தி அம்மன் 2 படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எனும் தகவலும் உலவியது.இதனால்,அப்பா குட்டி படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாம்.இப்போது மூக்குத்தி அம்மன் 2 படம் சொன்னபடி வெளியாகிவிடும் என்று உறுதியாகியிருக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து மற்றும் பொருட்செலவு ஆகியனவற்றில் இம்மூன்று படங்களும் முன்னால் நிற்கின்றன.எனவே,திரையரங்குக்காரர்கள் இந்தப்படங்களைத் திரையிடவே முன்னுரிமை கொடுப்பார்கள்.அதனால்,அப்பா குட்டி படத்துக்கு நல்ல மற்றும் பெரிய திரையரங்குகள் கிடைக்காது எனும் நிலை.

அதோடு,அப்பா குட்டி படம்,குடும்பத்துடன் அனைவரும் இரசித்துப் பார்க்கக்கூடிய மாறுபட்ட திரைக்கதையைக் கொண்ட படமாகத் தயாராகியிருக்கிறதாம்.இப்படிப்பட்ட படத்தை பெரும் போட்டிக்கு நடுவில் வெளியிட்டால் கவனம் ஈர்க்காமல் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.எனவே இந்தப்படத்தைத் தனிக்கவனம் எடுத்து மக்கள் பார்க்கக்கூடிய வகையில் வேறொரு தேதியில் வெளியிடுவதே நல்லது என்று பலரும் விஜய் ஆண்டனியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட விஜய் ஆண்டனி,படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க ஒப்புக்கொண்டார் என்றும் ஒரு சரியான தேதியைக் கண்டறிந்து அறிவிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts