சினிமா செய்திகள்

சிம்பு மைக்கேல் ராயப்பன் சிக்கல் – உஷாராஜேந்தர் அதிரடி கடிதம்

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்தது.

அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது.

நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆர்.கே.செல்வமணி, உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

அதன்பின் முதல்கட்டப் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் சம்மேளனம் கலந்துகொண்டது. அதனால், இனிமேல் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதோடு, முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 21,2021) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், இச்சிக்கல் தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார்.

அதில்….

1.தயாரிப்பாளர் சிவசங்கருக்கும் நடிகர் சிலம்பரசனுக்கும் இடையிலான பிரச்சினையில் தயாரிப்பாளர் சிவசங்கர் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொண்டேன் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குக் கடிதம் கொடுத்து பிரச்சினையை முடித்துவிட்டார்.

2.திருப்பதி பிரதர்ஸ் நிறுவனர் லிங்குசாமி அவர்களுக்கும் நடிகர் சிலம்பரசனுக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ளது.அதன்படி திரு.சிலம்பரசனின் கால்ஷீட்கள் பல மாதங்களுக்கு வீணடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர வேண்டியதில்லை. மேலும் அதற்கு வட்டியும் இல்லை என்று ஷரத்து உள்ளது.இருந்தாலும் மனிதாபிமானம் அடிப்படையில் வட்டியில்லாத அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டுள்ளோம்.

3. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. டி.இராஜேந்தர் அவர்களுக்கும் பி டி எஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் உரிமையாளர் திரு பி.டி.செல்வகுமார் என்பவருக்கும் இது நம்ம ஆளு படத்தின் தொலைக்காட்சி உரிமம் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதில், திரு பி.டி.செல்வகுமார் என்பவர் எந்த ஒரு மூன்றாவது நபருக்கும் இந்த உரிமையை மாற்றித் தரக்கூடாது என்று ஷரத்து உள்ளது. எனவே, இதில் இருவருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும் என்று ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என் மகன் நடிகர் சிலம்பரசனுக்கும் இந்த பிரச்சினைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

4.தயாரிப்பாளர் திரு. மைக்கேல் ராயப்பன் பிரச்சினையில் கடந்த காலத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த நடிகர் விஷால் அவர்கள் நடிகர் சிலம்பரசனைப் பழிவாங்கும் நோக்கத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கங்காரு கோர்ட் நடத்தி நடிகர் சிலம்பரசனின் படங்கள் வெளியாவதிலும் புதியபடங்களில் நடிப்பதிலும் பிரச்சினை செய்துவருகிறார் என்று அவர் மீதும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும், நடிகர் சிலம்பரசன் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். (வழக்கு எண்.CS17/2019 ) இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.அதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி திரு. மைக்கேல் ராயப்பன் அவர்கள் பிரச்சினையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த ஒரு கட்டப்பஞ்சாய்த்தும் செய்யவில்லை கங்காரு கோர்ட் நடத்தவும் இல்லை என்று கூறியுள்ளீர்கள்.

எனவே, மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை கோர்ட்டில் தான் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி இருக்க கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு முரண்பட்டு தாங்கள் எந்த ஒரு பஞ்சாயத்தும் செய்ய இயலாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கும் இக்கடிதம் மூலம், மைக்கேல் ராயப்பன் தொடர்பான சிக்கலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிடக்கூடாது என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

Related Posts