சினிமா செய்திகள்

அரசன் படப்பிடிப்பு தடைபட்டிருப்பது ஏன்? – உலவும் தகவல்

வெற்றிமாறன் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன்.

இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நிறைவடைந்திருக்கின்றன.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குமென்று சொல்லப்பட்டிருந்தது.அந்தப் படப்பிடிப்பில் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ள விஜய்சேதுபதி கலந்து கொள்கிறார்.வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் மற்றும் சந்திராவாக நடித்த ஆண்ட்ரியாவும் கலந்து கொள்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.‌

ஆனால்,திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.எப்போது தொடங்கும் என்கிற தெளிவும் இல்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏன்?

நாயகன் சிம்பு,சொன்ன தேதியில் துபாயில் இருந்து திரும்பவில்லை என்றொரு காரணம் சொல்லப்படுகிறது.ஆனால்,அதெல்லாம் ஒரு காரணமே இல்லை.அவர் வருவதில் ஒரு சிக்கலும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

அப்படியானால் சரியான காரணம் என்னவென்று கேட்டால்?

இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாலேயே படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று சொல்கிறார்கள்.

வழக்கமாக,வெற்றிமாறன் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போக அவர் மட்டுமே காரணமாக இருப்பார் என்று சொல்வார்கள்.ஆனால்,இப்போது அவர் நாயகன் சிம்பு ஆகியோர் தயாராக இருந்தும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கக் காரணம் பணம் மட்டுமே என்கிறார்கள்.

அதோடு,அரசனின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.ஆனால்,அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.உத்தேசமாக ஆகஸ்ட் இறுதிவரை அவர் அந்தப்படப்பிடிப்பில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.

அரசன் படப்பிடிப்பை விட்டுவிட்டு அவர் அந்தப்படத்துக்குப் போகக் காரணமும் பணம்தான் என்கிறார்கள்.அவரிடம் ஒப்புக்கொண்டபடியான தொகையைக் கூடக் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனாலேயே அவர் மணிரத்னம் படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

இம்மாதம் 24 இல் படப்பிடிப்பைத் தொடங்கி மொத்தப் படப்பிடிப்பையும் வேகமாக முடித்துவிடத் திட்டமிட்டிருந்தார்களாம்.ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மத்தியில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து அக்டோபரில் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகளை முடித்து நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியையொட்டி படத்தை வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

இப்போது,தயாரிப்பாளரின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக எல்லாமே மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் தாணு,எதையும் சமாளிக்கக் கூடியவர்,அவரால் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

உண்மை என்ன என்பது சார்ந்தோருக்கே வெளிச்சம்.

Related Posts