September 16, 2026
சினிமா செய்திகள்

கில் ரீமேக்கில் நடிக்க துருவ் ஒப்புதல் – ஏன்?

நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.ஜாக்கி எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது.

அதற்கு முன்னதாக துருவ் நடிக்கும் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியானது.

அதில்……

துருவ் விக்ரமின் அடுத்தபடமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’,‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார்.இதன்மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல்முறையாக இணைகின்றனர்.

பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை,பென் ஸ்டுடியோஸ்,ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி.ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில்,உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில்,தற்போது படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே,துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23 ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் முழுமையான நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது,இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற கில் எனும் திரைப்படத்தை மொழியாக்கம் செய்கிற முயற்சி.

இதில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமெல்லாம் வாங்கிய துருவ்,அதன்பின் இதில் நடிக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.அதன்பின் இந்தக்கதை வேண்டாம் வேறு கதை சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பிறகு,இந்தப்படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.அதன்பின்னர் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்போது அதே கதையா? வேறு கதையா? என்று கேட்டால்? அதேகதைதான் என்று சொல்கிறார்கள்.

அந்தக்கதையில் நடிக்க மறுத்த துருவ்,இப்போது எப்படி ஒப்புக்கொண்டார்?

இந்தப்படத்தில் துருவ் ஒப்பந்தமானதும் அவர் விருப்பப்படி வில்லன் நடிகர்,சண்டைப்பயிற்சி இயக்குநர்,இசையமைப்பாளர் ஆகியோரை ஒப்பந்தம் செய்தனர்.

அதோடு,அவர் சொன்ன கதாநாயகியையும் ஒப்பந்தம் செய்து அவருக்கும் பெரும் தொகை முன்பணமாகக் கொடுத்துவிட்டார்களாம்.

இப்போது அந்த நாயகி வேண்டாம் என்பது துருவ்வின் முடிவு.அவருக்கு பெரும்தொகையை முன்பணமாகக் கொடுத்த பிறகு துருவ்,அவரை வேண்டாமெனச் சொன்னதால் சிக்கல் எழுந்து நீடித்துக்கொண்டும் இருந்தது.

இப்போது படக்குழுவினர் துருவ்வின் முடிவை ஏற்று வேறுநாயகியை நடிக்கவைக்கிறோம் என்று உறுதி கொடுத்ததால் இந்தப்படத்தில் அதேகதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

எப்படியெல்லாம் சிக்கல் வருது பாருங்க.

Related Posts