அமலாக்கத்துறைக்கு அபராதம் – ஆகாஷ் பாஸ்கரன் உற்சாகம்
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் அந்தப் படங்களின் வேலைகள் அப்படியே தடைபட்டன.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம் எனக்கூறி இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு இன்னும் தயாராகவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் இன்னும் பதில் மனுத்தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல எனவும் கூறினர். ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இந்தத் தொகையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்குச் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒன்றிய பாஜகவால் புனையப்பட்ட இந்தப் பொய்வழக்கு,நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் உடைந்து கொண்டே வருகிறது என்பதால் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பினர் உற்சாகமாக இருக்கின்றனர்.
அதன் வெளிப்பாடாக தடைபட்டிருந்த இட்லி கடை,பராசக்தி மற்றும் இதயம் முரளி ஆகிய படங்களின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.











