September 16, 2026
சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் அதிரடி – கவுதம்ராம்கார்த்திக் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் 5 ஆவது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது.

முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் அதுவரை எடுத்த காட்சிகளைத் தொகுத்து தயாரிப்பாளருக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சின்னசாமி.

அதைப்பார்த்துப் பெரிதும் அகமகிழ்ந்து, புதுஇயக்குநரை வைத்துப் படமெடுக்கிறீர்களே? என்று என்னைப் பலரும் பயமுறுத்தினார்க்ள்.ஆனால் நீங்கள் எடுத்ததைப் பார்த்தால் புதுஇயக்குநர் படம் என்று சொல்லவே முடியாது.அவ்வளவு நன்றாக இருக்கிறது சிறப்பாகச் செய்யுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினாராம் தயாரிப்பாளர்.

பெரும் உற்சாகத்தோடு வந்த இயக்குநர் சின்னசாமி,அடுத்த கட்டப் படப்பிடிப்பை கோயில்பட்டியில் தொடங்கிவிட்டார்.

சனவரி 16 அன்று தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அபிராமி,நரேன் ஆகியோர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இன்னும் ஓரிரு நாட்களில் நாயகன் கவுதம்ராம் கார்த்திக் அந்தப்படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படப்பிடிப்பு, கோயில்பட்டியைத் தொடர்ந்து தூத்துக்குடி,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடக்கவிருக்கிறதாம்.

சுமார் நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாட்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

இயக்குநர் சின்னசாமி,இயக்குநராகத்தான் அறிமுகமாகிறார்.ஆனால்,அவர் ஆர்பி.செளத்ரியின் சூப்பர்குட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.

அதனால், திரைப்பட உருவாக்கம் தொடர்பாக நீண்ட அனுபவம் பெற்றவர் என்பதால், வழக்கமாகப் புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு ஏற்படும் சிக்கல்களையெல்லாம் எளிதாகக் கையாண்டு படப்பிடிப்பை வேகமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் கண்ணன்ரவி, இயக்குநரை முழுமையாக நம்பி மொத்தப் பொறுப்பையும் தேவையான பணத்தையும் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதனால், மிக வேகமாக எல்லா வேலைகளும் நடக்கின்றன என்று சொல்கிறார்கள்.

இன்னொருபுறம், நாயகன் கவுதம் ராம் கார்த்திக்கும் இந்தக் கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறாராம்.இப்படம் நிச்சயமாகப் பெரிதாகப் பேசப்படுவதோடு வசூல் வெற்றியையும் பெறும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

நம்பிக்கை பலிக்கட்டும்.

Related Posts