மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குபவர் இவர்தான் – புதிய தகவல்
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’.
இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கிரிஷ் இசையமைத்திருந்தார்.
இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால்,மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ஆம் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் இந்தமுறை அம்மனாக பிரபல நடிகை திரிஷாவை களமிறக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
அதோடு அந்தப்படத்துக்கு மாசாணி அம்மன் என்று பெயர் வைக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜூலை 12,2024 அன்று வெளியான அந்த அறிவிப்பின்படி, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நடிக்கிறார்.
மற்ற நடிகர்கள், படத்தின் இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனால், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாக விசயத்தில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி என்கிற தகவலை,
உறுதிப்படுத்தும் விதமாக,இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பில் ஆர்.ஜே.பாலாஜி பெயர் இடம்பெறவில்லை என்று சொல்லப்பட்டது.
அந்தக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்ன தகவல்?
ஐசரி கணேஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார் என்பதுதான் அந்தத் தகவல்.
மூக்குத்தி அம்மன் என்கிற கதை ஆர்.ஜே.பாலாஜியின் கற்பனை அல்லது அதைக் கற்பனை செய்தவரை கண்டுபிடித்தது அவர். அதன் காரணமாக அது படமாகி வெற்றியும் பெற்றது.
இப்போது அந்த எண்ணத்தை திரைப்படமாக்கப் பணம் போட்ட தயாரிப்பாளரிடம் உரிமை இருக்கிறது. அதனால் அதன் இரண்டாம் பாகத்தை அவர் அறிவிக்கிறார்.
பெயரை வைத்துவிட்டால் போதுமா? படமெடுக்க கதை வேண்டுமே? அதற்காக சுந்தர்.சி யைப் பிடித்திருக்கிறார்கள்.
அவரும் அதை ஒப்புக்கொண்டு வேலைகளைத் தொடங்கிவிட்டாராம்.
நடக்கட்டும் நடக்கட்டும்.