நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதில் – விவரம்
ஏப்ரல் 26,2026 அன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் வருவாய்ப் பகிர்வு முறையில் வரும் நடிகர்களின் படங்களை மட்டுமே தயாரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மே 2 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பதில் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழ்த் திரையுலகின் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் இணைந்து திரைத்துறை மறுசீரமைப்பு என்று கடந்த 2024 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கினோம்.
அதில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள முன்னண்னி தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், பொதுவான விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
அவ்வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மறுசீரமைப்புக் கோரிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 18.08.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் 11 ஆவது பத்தியில் தெளிவாக, முன்னணி நடிகர்கள் மற்ற மாநிலங்களைப் போலவே வருவாய்ப் பகிர்வு முறையில் நடிக்க வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலே தங்களுக்குத் தெரிவித்து வருகிறோம்.
அதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது, செயற்குழுவில் கலந்து பேசவேண்டும் என்றும், முன்னணி நடிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தி அதன்பின்னர் நாங்கள் முறையாகத் தெரிவிக்கின்றோம் என்று நடிகர் சங்கத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் கூறினார்கள்.
அதன் பின்னர், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆவது வாரத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்சனைகள் குறித்து நமது இரு அமைப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்சனைகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
அப்படி பேச்சுவார்த்தை நடக்கும்போது கூட வருவாய்ப் பகிர்வு பற்றிக் கூறினோம். அப்பொழுதும் தங்களது சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது. அதனால் நாங்கள் முன்னணி நடிகர்களை அழைத்துப் பேசி முடிவெடுத்துக் கூறுகிறோம் என்று சொன்னீர்கள்.
அதன் பின்னர் ஒருவருடம் தங்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வராமல் இருந்தாலும், தொடர்ந்து எங்களது சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தினை ஏற்க மறுத்து வருவதாலும், கடந்த 09-11-25 அன்று நடைபெற்ற எங்களது பொதுக்குழுவில் மேற்படி நடிகர்கள் வருவாய்ப் பகிர்வு முறையில் நடிக்க வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தங்களுக்கு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக அனைத்துத் திரைத்துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை முன்னணி நடிகர்கள் வருவாய்ப் பகிர்வு முறையில் நடிக்க வரவேண்டும் என்று தெரியப்படுத்தியும், தென்னிந்திய நடிகர் சங்கம் எந்தவிதமான முடிவும் அறிவிக்காமல் இருந்து வருகிறது என்பதை அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் தற்போது புதியதாகப் பதவியேற்ற நிர்வாகம் நடத்திய பொதுக்குழுவிலும் வருவாய்ப் பகிர்வு முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதனை நடிகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்று கூறுவது எங்களுக்கு மிகவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு முறையும் நமது இரு அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த முன்னெடுக்கும்போது வாய்மொழியாக எங்கள் தரப்பிலிருந்து இந்த விசயத்தினை நடிகர்சங்கத் தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், தாங்கள் ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பாக எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அவ்வகையில் கடந்த மூன்றுவருட காலமாக நடிகர்கள் வருவாய்ப் பகிர்வு முறையில், தாங்கள் எந்தவிதமான முடிவும் எடுக்காத காரணத்தினாலும், எங்கள் பரிந்துரைக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலும், தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் தெரிந்திருந்தும் நாங்கள் அடையாள வேலைநிறுத்தம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எனவே, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாங்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில், எங்களது பொதுக்குழுவின் தீர்மானமான அடையாள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணிக்கும் பட்சத்தில் எங்களது அடையாள வேலைநிறுத்தம் என்பது தொடரும் என்பதை தங்களுக்கு இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.










