தயாரிப்பாளர்கள் சங்க தீர்மானமும் நடிகர் சங்கத்தின் எதிர்வினையும் – விவரம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. இதில் இச்சங்கத்தின் தலைவர்
ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலக் கண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் என்.சுபாஷ் சந்திரபோஸ் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு….
சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகை கடந்த 10 வருடங்களாக நிலுவையில்
உள்ளது.அதை புதிதாகப் பதவியேற்க இருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்யவேண்டும்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து, தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றால், அந்தத் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தம் செய்து கடிதம் வாங்கி வருவதைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டிக்கிறோம்.
இதுகுறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இணைந்து, வரும் மே 10 ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்துகின்றனர். அதில் 4 மாநில தயாரிப்பாளர்கள் இணைந்து, குறிப்பிட்ட தேதியைத் தீர்மானித்து, அந்தத் தேதியில் இருந்து 4 மாநிலங்களிலும் எந்தப் படத்தையும் வெளியிடுவது இல்லை என்று முடிவெடுக்க இருக்கின்றனர். அதற்கு பொதுக்குழு ஆதரவு தெரிவிக்கிறது.
தயாரிப்பாள்ர்களின் இலாப- நட்டங்களில் அவர்களும் பங்குகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே நடைபெற்ற பொதுக்குழுவில்
முடிவெடுத்து நடிகர் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.ஆனால்,அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்கள். மேலும், நடிகர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வரவில்லை.
ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.ஆனால்,தமிழ்நாட்டில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் தயாரிப்பாளர்கள் கூட இனி திரைப்படங்கள் எடுக்கத் தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இனிவரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வருவாய்ப் பகிர்வு என்ற முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஷசயத்தை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கும் வகையில்,ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும்,நடிகர் சங்கம் தொடர்ந்து இதேபோக்கைக் கடைபிடிக்குமானால் தொடர் வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்
இவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்வினையாக நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் நேற்று வெளியிட்ட அறிக்கை….
வணக்கம்,
பார்வை- 27.04.2026 தேதியிட்ட தங்கள் கடிதம்
பொருள்- வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்
பார்வையில் காணும் தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2, 2026 தேதியன்று வேலைநிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகத் தெரிவித்து உள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது.
தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூகதீர்வு காண அமைப்புரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும்,பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்துவரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலைநிறுத்த அறிவிப்பை தாங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது.
திரைத்துறை சார்ந்த நடிகர்கள்,கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலைநிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை,இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும்,தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக,நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவித கடிதமோ,மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்பதையும்,அது தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள்
சட்டவிதிகளில் இடமில்லை என்பதையும் இதன் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
சுமார் ஓராண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ்த் தயாரிப்பாளர்கள், நடிகர்கள்
இருதரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்கும் அமைப்புகள் ரீதியிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவோலையை நம் இருதரப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவின் கலந்தாலோசனைக்குப் பிறகு இறுதி செய்து, அதை தங்களிடம் நாங்கள் ஒப்படைத்ததையும், அது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுநாள்வரை எந்த நகர்வும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
இதுவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது.
ஆகவே, தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும் கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப்பெறுமாரும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மே 4-ஆம் தேதி வெளியான பிறகு,பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதனிடையே,கடந்த இருதினங்களாக ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் வெகுவேகமாகப் பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும்,பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும்,தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து,சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது.
அது தவறான தகவல் எனில் உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும்,அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை,நமது சந்திப்பிற்கு முன்னர்
திரும்பப்பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இணைந்து செயல்பட்டு தமிழ்த் திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ்காலத்திற்காகவும்,வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம்.அதையே துறைசார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்.
நன்றி வணக்கம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











