October 28, 2026
சினிமா செய்திகள்

தனுஷின் ஓம் பட வியாபாரத்தில் நடந்த மாற்றம் – யாருக்கு நன்மை?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்,மம்முட்டி,சாய் பல்லவி,ஸ்ரீலீலா,இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஓம்.இந்தப் படத்துக்கு எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தனுஷின் 55 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இந்தப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.அக்டோபர் 15 அன்று ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியானதால் இந்தப்படத்தைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.

அதன்பின் நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.இப்போது அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

ஒருபக்கம் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் வேலைகள் நடக்க இன்னொருபுறம் படத்தின் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற இரண்டுக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டனர்.

அவர்கள் மினிமம் கியாரண்டி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் படத்தை வாங்கிக்கொள்வதாகவும் அதற்காக சுமார் முப்பது கோடி கொடுத்துவிடுவதாகவும் சொல்லியிருக்கின்றனர்.

பொதுவாகப் பார்த்தால் இது நல்ல விலை,நல்ல வியாபாரம்தான்.

ஆனால்,தனுஷ் தரப்போ,எம்ஜி அடிப்படையில் கேட்டவர்களுக்குக் கொடுக்காமல் டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக அடிப்படையில் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.அந்த அடிப்படையில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

ஏன் இப்படி?

படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான அமரன்,சுமார் எழுபத்தெட்டு கோடியை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்திருக்கிறது.அதனால் விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யுங்கள்,உங்களுக்குக் கூடுதல் தொகை கிடைக்கும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

அவருடைய கருத்தை ஏற்று எம்ஜி அடிப்படையில் நடக்கவேண்டிய வியாபாரத்தை டிஸ்டிரிபியூசன் அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலான திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்களும்,வளைகுடா நாடுகளுக்கு மட்டும் விநியோக அடிப்படையில்தான் படத்தைக் கொடுப்போம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்குக் காரணம்,படத்தில் மம்முட்டி நடித்திருப்பதால் வளைகுடா நாடுகளில் கூடுதல் வசூல் செய்யும் எனவே எம்ஜி அடிப்படையில் கொடுக்காமல் விநியோக அடிப்படையில் கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று முடிவுசெய்து கொடுத்திருக்கிறார்களாம்.

படத்தின் மீதான நம்பிக்கையில் இந்த வியாபாரங்கள் நடந்திருக்கின்றன.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகிய இருவரில் இது யாருக்கு நன்மை? என்பது நவம்பர் 20 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Related Posts