October 24, 2026
சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் ஆகிறார் கமல் – பின்னணி இதுதான்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இவற்றோடு எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இம்மூன்று படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இம்மூன்று படங்களின்,தமிழ்,தெலுங்கு உட்பட எல்லா மொழி வெளியீட்டு உரிமைகளையும் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றுக்கொள்ளவிருக்கிறதென்றும் அதற்காக அந்நிறுவனம் கொடுக்கவிருக்கும் தொகை மிகப்பெரிது என்றும் தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,இப்படங்களின் வியாபாரத்துக்காக கமல்ஹாசன்,தன் நிலையிலிருந்து சற்று இறங்கிவந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் ஏழு ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன்.அதன்பின் அந்நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார்.

அதன்பின்,கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.அவரும் இந்த ஆண்டோடு அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து யாரை தொகுப்பாளராக நியமிப்பது? என்கிற குழப்பத்தில் அந்நிறுவனம் இருந்ததை அறிந்த கமல்,இதை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறார்.

உடனே,அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டு,மீண்டும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வருகிறேன்,அதற்காக நீங்கள் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை வாங்கிக் கொள்ளவேண்டும்,அதற்காக இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இன்றைய சந்தை நிலவரப்படி அவர் கேட்ட தொகை பெரிது என்று நிறுவனம் கருதுகிறது.அதனால் முடிந்த அளவு குறைத்துப் பேசுங்கள்,அதேசமயம் எப்படியாவது இந்த வியாபாரத்தை முடிக்கவேண்டும் ஏனெனில்,இந்தப் படங்களின் உரிமைகளை வாங்குகிறோம் என்பதைவிட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் கமல் வருவது முக்கியம் என நிறுவனத்தின் மேலிடம் சொல்லியிருக்கிறதாம்.

இதனால்,இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.கமல் எண்ணப்படி இந்த வியாபாரம் நிறைவடைந்தால்,ராஜ்கமல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இலாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்காகவே,இனி பிக்பாஸ் நிகழ்ச்சியே வேண்டாமென முடிவெடுத்த கமல்,மீண்டும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

இந்த வியாபார ஒப்பந்தம் கையெழுத்தானால் சார்ந்தோர் அனைவருக்கும் இலாபம்தான் என்பது தனிச்சிறப்பு என்கிறார்கள்.

Related Posts