கமல் விக்ரம் விஜய் – மோதிரக் கைகளால் குட்டுப்பட்ட அபிஹசனுடன் ஒரு சந்திப்பு
அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி.
கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். அந்த அபிதான் வளர்ந்து கதாநாயகனாகியிருக்கிறார்.

Abi Hassan-family
நாசர் கமீலா தம்பதியினரின் மூன்றாவது மகன்.
படம் வெளியான பின்பு பல்வேறு தரப்பிலிருந்தும் வருகிற பாராட்டுகளுக்கு நடுவே அவரைச் சந்தித்தோம்.
பேசுகிறவற்றைக் கூர்ந்து கவனித்து கேட்கிறவற்றை உள்வாங்கி நிதானமாகப் பதில் சொல்கிறார்.
நடிப்புக்குப் பயிற்சி வேண்டும் என்று உரத்துச் சொல்லும் நாசரின் மகன் நாயகனாக நடிக்க என்ன பயிற்சி எடுத்தார்?
நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன்,ஒரு தனியார் நடிப்புப் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்தேன்.அப்பா அங்கு நடிப்புத் துறைக்கு தலைவராக இருந்து நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.அப்பா மகன் என்கிற உறவைத் தாண்டி பயிற்சியாளர் மாணவன் என்கிற புரிதலோடு நடிப்பைக் கற்றுக்கொண்டேன்.வீட்டில் ஜாலியாகப் பேசும் அப்பாவை அங்கு போய்ப் பார்த்தால் பயமாக இருக்கும். அவ்வளவு கறாராக இருப்பார்.
அங்கு பயிற்சி எடுக்கும்போதே நடிக்க சில வாய்ப்புகள் வந்தன. அவை சரியானதாக இல்லை.அதனால், சினிமாவில் எதாவது ஒரு துறையில் இருக்கவேண்டும் என்ற முடிவோடு இயக்குநர் அட்லீ சாரிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். அதன்பின்னர்தான் நடிக்க வந்தேன் என்கிறார் அபி.
அப்பா பெரிய நடிகர் அம்மா தயாரிப்பாளர் புகழ்பெற்ற குடும்பம் ஆகியன அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை.
நடிகர் தேர்வுக்கும் போய் பல நூறு பேர்களோடு போட்டியிட்டு இந்த வாய்ப்பைப் பெற்று பெற்றோருக்குப் பெருமை தேடித் தந்திருக்கும் அபிக்கு அடுத்தடுத்து நாயகனாக நடிக்க நிறைய அழைப்புகள் வருகின்றனவாம்.
அவசர அவசரமாக அடுத்தடுத்து படம் செய்ய நினைக்கவில்லை, நிதானமாக அதே சமயம் மிகச் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார்.
உதவி இயக்குநராகப் பணியாற்றிய நேரத்தில் விஜய்யிடம் நற்பெயர் பெற்ற அபிக்கு முதல்படத் தயாரிப்பாளராக கமல் அமைந்தார். அவரும் படம் பார்த்துவிட்டு மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார்.
உடன்நடித்த விக்ரம், ஒரு மூத்த சகோதரன் போல் நடந்து அபி விசயத்தில் அக்கறை காட்டியிருக்கிறார். அது படப்பிடிப்பு முடிந்து படம் வெளியான பின்பு இன்றுவரை தொடர்கிறதாம்.
எனக்கு இப்படியெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை உனக்குக் கிடைத்திருக்கிறது அதைச் சரியாகப் பயன்ப்டுத்திக் கொள் என்பதுதான் நாசரின் அறிவுரை.
அம்மா கமீலாநாசரின் வழிகாட்டலில் அடுத்த படத்துக்கான கதைத் தேர்வில் ஈடுபட்டிருக்கும் அபிக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.
– அ.தமிழன்பன்











