மாமன்னன் பட உரிமையை சன் டிவிக்குக் கொடுக்க மறுத்த உதயநிதி – ஏன்?
உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன்.
இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய படமாக இருந்தது.
திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்றதையடுத்து ஜூலை 27 ஆம் தேதி இந்தப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.இதன் மூலம் அனைவரும் வீட்டிலிருந்து பார்க்கும் வசதி கிடைத்தது.
இதற்கடுத்து இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது? என்பதுதான்.
ரெட்ஜெயண்ட் தயாரித்திருக்கும் படமென்பதால் இயல்பாக இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.
அந்த நினைப்பு பொய்யாக்கியிருக்கிறார் உதயநிதி.
இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுத்துவிட்டார்களாம்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
ஏன் இப்படி?
இப்படத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் இருபது கோடி கொடுக்கிறோம் படத்தை எங்களுக்குக் கொடுங்கள் என்று சன் தொலைக்காட்சி கேட்டிருக்கிறது.
ஆனாலும் அவர்களுக்குத் தராமல் அதைவிடப் பாதிவிலையில் அதாவது சுமார் பத்துகோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுத்திருக்கிறார் உதயநிதி.
அதற்குக் காரணம்,தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் எக்ஸ்க்ளூசிவ், நான் எக்ஸ்க்ளுசிவ் என இரண்டுவகைகள் இருக்கின்றன.
எக்ஸ்க்ளுசிவ் என்றால் எந்தத் தொலைக்காட்சி உரிமையை வாங்குகிறதோ? அதுமட்டும்தான் அப்படத்தை ஒளிபரப்ப முடியும். நான் எக்ஸ்க்ளுசிவ் என்றால் ஒரு படத்தின் உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒளிபரப்பிக் கொள்ளலாம்.
சன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை அது எக்ஸ்க்ளுசிவ் வகையில் அதாவது அவர்கள் மட்டுமே ஒளிபரப்பும் வகையில்தான் படங்களை வாங்கும்.அப்படி சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமை கொடுத்துவிட்டால் அப்படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட வேறு யாரும் பயன்படுத்தவியலாது.
அதனால்தான் இருபது கோடி கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர்களுக்குப் படத்தைக் கொடுக்காமல் நான் எக்ஸ்க்ளுசிவ் வகையில் விஜய் தொலைக்காட்சிக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி.
இதன்படி இப்படத்தை விஜய் தொலைக்காட்சி முதன்முதலில் ஒளிபரப்பும். அதன்பின் கலைஞர் தொலைக்காட்சியிலும் இந்தப்படம் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.











