சினிமா செய்திகள்

லால்சலாம் அறிவிப்பு அயலான் எதிர்ப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் லால்சலாம்.இப்படத்தில்,
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் 2024 பொங்கல்நாளில் வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னால், செப்டம்பர் 23 ஆம் தேதியன்று சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டுநாட்களுக்கு முன்னால், அதாவது செப்டம்பர் 30 அன்று சுந்தர்சி யின் அரண்மனை 4 படம் 2024 பொங்கல்நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இவ்விரண்டு படங்களும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக லால்சலாம் படமும் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அயலான் படக்குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிர்வாகத்தயாரிப்பாளர் செளந்தர் இதுகுறித்து நேற்றிரவு வெளியிட்டுள்ள பதிவில்….

வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் திரைப்படம் வருகிறது என்று இன்று அறிவிப்பு வந்துள்ளது. பொங்கலுக்கு, இரு படங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடீரென்று நாங்களும் பொங்கலுக்கு வருவோம் என்று கடையை விரித்தால்,முதலில் அறிவித்த தயாரிப்பாளர்கள் படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் நிலைமை என்னவாகும்?.

ஜெயிலர் படம் தனித்த தேதியில் வெளியிட்டு நன்றாக கல்லா கட்டியது.மூன்று மாதத்திற்குள் மற்றொரு திரைப்படமா என அறிவித்த தயாரிப்பாளர்களுக்கு கேள்வியினை எழுப்பத் தோன்றுகிறது.

லியோ போன்ற திரைப்படங்கள், படப்பிடிப்பு ஆரம்பித்த உடனே வெளியீட்டுத் தேதி அறிவித்தார்கள். இதனால் மற்ற தயாரிப்பாளர்களின் படம் வெளியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியிடப்படுகிறது.

திரு ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் படப்பிடிப்பு ஆரம்பிக்கும நாளிலே வெளியீட்டுத் தேதி அறிவித்தால் தியேட்டர் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். தயாரிப்பு சங்கங்கள் இதில் தலையிட்டு நல்ல முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அறிவிப்பு தேதி வெளியிட்ட அயலான் மற்றும் அரண்மனை 4, தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் வெளியாகி உள்ளது என்பது இப்போதே தெள்ளத் தெளிவாகிறது. இதற்கு லால் சலாம் தயாரிப்பு நிறுவனமும், திரு ரஜினிகாந்த் அவர்களும் என்ன முடிவு செய்வார்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் என்ன செய்யப்போகிறார்?

Related Posts