நீங்கள் எதிர்பார்க்காத படமாக சீன் இருக்கும் – சூர்யா நம்பிக்கை
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார்.
மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் சிவகுமார்- கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசுகையில்….
சூர்யாவை இந்தப்படத்தில் மிகவும் வித்தியாசமாக பார்க்கப் போகிறீர்கள்.இரசிகர்கள் அனைவருக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.செம காமெடியா…செம லந்தா…செம மாஸா…திரில்லரா…லவ்வபுளா…ஒரு காமெடி ஃபிலிம்.நவம்பர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இதுவரை 15 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.ழகரம் ஸ்டுடியோஸிற்கு ‘சீன்’ முதல் திரைப்படம்.இந்த நிறுவனம் இளம் தலைமுறையினருக்கும்..புது திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக்கதையை இயக்குநர் ஜித்து மாதவன் சொல்லும்போது நாங்கள் சிரித்துக் கொண்டே இருந்தோம்.இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்,நடிகர்,நடிகைகளுக்கும் நன்றி என்றார்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணைதயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில்….
நல்ல படைப்புகளை இரசிகர்களுக்கு வழங்கவேண்டும் என்றொரு கனவு சூர்யா அண்ணாவிற்கு இருந்தது.அதனுடைய தொடக்கம்தான் இந்த ழகரம் ஸ்டுடியோஸின் ‘சீன்’ திரைப்படம்.
இந்தப்படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து ஓராண்டு இங்கு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதற்குதான் திரைப்படங்கள்.இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்தும்.இதற்காக படக்குழுவினர் பெருந்தன்மையுடன் நேர்த்தியாக முயற்சி செய்து இருக்கிறார்கள்.இந்தப்படத்தில் சமூக ஊடகத்தில் பிரபலமான திறமை வாய்ந்த இளம் கலைஞர்களை தேர்வு செய்து வாய்ப்பளித்திருக்கிறோம் என்றார் .
நடிகர் ராஜ் பிரியன் பேசுகையில்….
என்னுடைய சொந்த ஊர் தேவகோட்டை அங்கு சூர்யாவின் ‘வேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.அப்போது நான் சின்னப்பையன்.சூர்யாவை சந்தித்து கைகுலுக்கினேன்.அதை கேட்ட யாரும் நம்ப தயாராக இல்லை.அப்போது போனும் இல்லை. ஆனால் நான் இன்று அதைப்பற்றி சொல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை.
ஒரு உண்மையை வெளிப்படையாகச் சொல்கிறேன்.எனக்கு சினிமா மீது ஆர்வம் இல்லை.ஏனெனில் நம்மால் சினிமாவிற்கு வர இயலாது.எனக்கு சென்னை தெரியாது.ஏனெனில் என் ஊர் தேவகோட்டை.அதனால் சினிமாவில் வரும் காட்சிகளை இமிடெட் செய்து சமூகஊடகத்தில் பதிவிடுவேன்.அந்தத் தருணத்தில் நடிகர் ஆனந்தராஜ் போல் நடிப்பேன்.இதைப் பார்த்த அனைவரும் நீ சினிமாவில் நடிக்கலாம் நன்றாக வருவாய் என சொன்னார்கள்.
அதன்பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.முதல்நாள் சூர்யா அண்ணாவுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
சூர்யா அண்ணா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தில் அவருடைய ரியாக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.இதை நான் இமிடெட் செய்ய முயற்சித்திருக்கிறேன்.ஆனால் வரவில்லை.
அதைத்தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இந்தப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி,பாடுவதற்கு வாய்ப்பு அளித்தார்.அவருக்கும் நன்றி.இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது.மற்றொரு பாடலும் இருக்கிறது.அதுவும் மிகச்சிறப்பாக இருக்கும்.
இதுவரைக்கும் வாழ்க்கை ‘குஜிலி மஸ்தாக’த்தான் இருந்தது.இனிமேல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார் .
நடிகர் டிராவிட் செல்வம் பேசுகையில்….
2013 ஆம் ஆண்டில் சூர்யா நடித்த திரைப்படத்திற்கு முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்க விருப்பப்பட்டு நாங்கள் 15 பேர் ஒரு ‘கேங்’காக திரையரங்கத்திற்கு சென்றோம்.டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற பிறகு,சீட் இல்லை.இருந்தாலும் படம் முழுவதையும் படிக்கட்டில் உட்கார்ந்து பார்த்தோம்.இன்று அதே சூர்யா அண்ணாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.எனவே எனக்கு இந்த தருணம் மிகவும் எமோஷனலாக இருக்கிறது.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கு நன்றி.அத்துடன் சமூகஊடகத்தில் பிரபலமான திறமைசாலிகளை மட்டுமே தேர்வு செய்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நடிகர் நஸ்லென் பிரேம்( Frame ) வைத்துவிட்டால் நடிப்பில் சூறாவளியாய்…சுனாமியாய்…நடிப்பார் என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்….
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா மூலமாக சூர்யா அண்ணாவை சந்தித்துப் பேசினேன்.அந்தத் தருணம் முதல் அவருடைய நிழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.சிறிய ஊரிலிருந்து கனவுகளை மட்டும் சுமந்து சென்னைக்கு வந்தவன் நான்.திரைப்பட விநியோகத்தில் பணியாற்றி அனுபவத்தை வளர்த்துக் கொண்டேன்.
‘சிங்கம் 2’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக திரையரங்குகளில் வெளியிட்டோம்.இந்தப்படத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சூர்யா அண்ணா எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.என்னுடைய உழைப்பை பாராட்டி 10 இலட்ச ரூபாயை பரிசாக வழங்கினார் சூர்யா.என்னுடைய உழைப்பை நடிகர் ஒருவர் அங்கீகரித்திருக்கிறார் என்ற சந்தோசமே என் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.
அதன்பிறகு நான் தனியாக விநியோக நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்பினேன்.தமிழகம் முழுவதும் ஆபீஸ் வைத்து விநியோக நிறுவனத்தை நடத்திடவேண்டும் என்றால் ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும்.படத்தை விநியோகிக்கவும் நிறைய பணம் தேவைப்படும்.அப்போது எங்கள் நிறுவனத்தின் சார்பில் முதன்முதலாக ‘துருவங்கள் 16’ என்ற திரைப்படத்தை விநியோகித்தோம். இப்படத்தின் வெற்றிவிழாவில் ராஜசேகர் பாண்டியனைச் சந்தித்தேன்.அவர் அப்போது மேடையில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘கடுகு’ திரைப்படத்தின் விநியோகத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மேற்கொள்ளும் என அறிவித்தார்.
அதன்பிறகு ஜோதிகா மேடம் நடித்த’மகளிர் மட்டும்’திரைப்படத்தில் பணியாற்றினேன்.இந்தப்படத்தின் வெற்றி மூலம் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வளர்ந்தது.இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்து இருக்கிறோம்.சூர்யா அண்ணாவின் வழியில்…சூர்யா அண்ணனின் நிழலில் நடந்தததால் இது சாத்தியமானது என நான் நம்புகிறேன்.
சூர்யா நல்லவிசயத்தை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறார்.இதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அரசியலுக்கா..? என கேட்கிறார்கள்.அவர் நல்லவிசயங்களை செய்து வருவதை மற்றவர்கள் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் அண்டைமாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரின் வாரிசு,சூர்யாவை அந்தக்கட்சியின் மாநிலதலைவர் பொறுப்பை ஏற்குமாறும் அரசியலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.அப்போது அவர் அதற்கு நேரடியாக மறுப்பு தெரிவித்தார் என்பதையும் நான் பின்னர் தெரிந்துகொண்டேன்.
நான் நல்லவிசயங்களை தொடர்ந்து செய்வது என்னுடைய சுய விருப்பம்.மக்களுக்காகவோ..அரசியலுக்காகவோ..நான் இதை செய்யவில்லை என்பதை அப்போதே அவர் குறிப்பிட்டார்.
சூர்யா அண்ணாவிற்கு கிரீடம் வேண்டும் என்று நிறையபேர் விரும்புகிறார்கள்.ஆனால் அண்ணனைப் பொறுத்தவரை அண்ணனின் தலையே கிரீடம்தான்.
‘கருப்பு’, :விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படமும் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் வெற்றி பெறும்.
‘சீன்’ திரைப்படம் பர்ஃபெக்ட்டான க்ரைம் திரில்லர் காமெடி திரைப்படம்.இப்படி ஒரு திரைப்படம் தமிழ்த்திரையுலகில் இதற்கும் முன் வந்ததே இல்லை.இந்தப்படத்தில் இரண்டாம்பாதியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்சிகள் தியேட்டரிக்கல் மொமெண்ட்ஸாக இருக்கும். தமிழகத்தில் காலை ஆறு மணி சிறப்புக்காட்சிக்கான பிரத்யேக அனுமதி கிடைக்கும் என காத்திருக்கிறோம்.அந்த அனுமதி கிடைத்தவுடன் படத்திற்கான ஆன்லைன் புக்கிங் ஸ்டார்ட் ஆகும் என்றார்.
நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில்….
இந்த மேடை எனக்கு புதிதல்ல.ஏற்கனவே இந்தமேடையில் நின்று கொண்டு ஒரு நடிகரைப்பற்றிப் பேசினேன்.அவர் இன்று எந்த அளவிற்குச் சென்றிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.அதேபோல் சூர்யாவைப் பற்றியும் நிறைய பேசலாம்.இவரை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப்படத்தில் நான் சூர்யாவிற்கு தந்தையாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.படத்தைப் பற்றி எந்த விசயத்தையும் பேசக்கூடாது என்று சொன்னார்கள்.அதை நான் கடைபிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஜித்து மாதவனுக்கும்,சூர்யாவிற்கும் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கவேண்டும்.கிடைக்கும் என்றார்.
நடிகர் நஸ்லென் பேசுகையில்…
சந்தோசமாக இருக்கிறது.நான் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை.’சீன்’ திரைப்படம்தான் என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம்.ஆனால் இரசிகர்களாகிய நீங்கள் காட்டும் பேரன்பு – எனக்கு எமோஷனலாக இருக்கிறது.இதயபூர்வமான நன்றி.இந்த அன்பு நவம்பர் 6ஆம் தேதி ‘சீன்’ படம் பார்த்த பிறகும் இருக்கவேண்டும் என்றார்.
நடிகர் சுஷின் ஷ்யாம் பேசுகையில்….
என்னுடைய முதல் தமிழ் திரைப்படம் இது.’தி ஒன்’ சூர்யாவுடன் பணியாற்றியது மறக்கமுடியாதது.படம் மிகச்சிறப்பாக இருக்கிறது. அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில்….
நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.நீண்டநாட்களுக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கிறேன்.எனக்கு எப்போதும் தமிழ் இரசிகர்களின் அன்பு பிடிக்கும்.தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து அளித்துவரும் அன்பிற்கும்,ஆதரவிற்கும் நன்றி.நவம்பர் 6ஆம் தேதி சீன் திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் பார்த்து இரசிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
12 வருடங்களுக்குப் பிறகு நான் தமிழில் நடிப்பதற்கு முதல்காரணம் ‘தி ஒன்’ சூர்யாதான்.உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் என்னுடைய நீண்டநாள் கனவு நனவானது என்றுதான் சொல்லவேண்டும்.அத்துடன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் இருந்து எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து ஒரேவிமானத்தில்தான் இங்கு வந்தோம் என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில்…..
எப்போதுமே தீபாவளி ரிலீஸ் நமக்கெல்லாம் ரொம்ப ஸ்பெஷல்.
நான் படித்துவிட்டு உதவிஇயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான்’காக்க காக்க’வெளியானது.நான் சென்னை கமலா திரையரங்கில் படத்தைப் பார்க்கச்சென்றேன்.நான் அதற்குமுன் என்னுடைய அண்ணன் படத்திற்குக் கூட்டம் எப்போது வரும்… எப்போது கூட்டத்தினர் கைதட்டுவார்கள் என ஏங்கி இருக்கிறேன்.’காக்க காக்க’படத்தின் சூர்யாவின் இன்ட்ரொடக்ஷன் சீன்.’மாயா’ என கத்திக்கொண்டே கீழே விழுவார்.அப்போது’உயிரின் உயிரே..’பாடல் ஸ்டார்ட் ஆகும்.அப்போது திரையரங்கமே பிளாஸ்ட் ஆனது போல் கைதட்டினார்கள்.அந்தநிமிடத்தில் ஒரு சந்தோசம் மனசு முழுக்க பரவியது.அந்தப்படத்தில்தான் அண்ணாவை நான் வேற லெவலில் பார்த்தேன்.
அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து நான் ‘பிதாமகன்’ படம் பார்த்தேன்.அதில் சத்தியம் தோற்பதில்லை என பேசுவார் ஆனால் உண்மையில் அண்ணன் வீட்டில் ஒருவார்த்தை கூட பேசமாட்டார்.ஆனால் அந்தப்படத்தில் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் மணிரத்னத்திடம் உதவியாளராக சேருகிறேன்.அப்போது அவர்’ஆய்த எழுத்து:படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் கம்ப்ளீட் ஆக வேறுமாதிரியாக இருந்தார்.ரொம்ப வருஷத்திற்கு பிறகு அதேபோல் இப்போது அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.ஏனெனில் கருப்பு பார்த்தோம்.அதில்’காட் மோடில் (God Mode)’இருந்தார்.அதன்பிறகு’விஸ்வநாத் & சன்ஸ்’ பார்த்தோம்.வேறு யார் இதைப்போல் நடிக்கமுடியும்? அழகாக அந்த கதாபாத்திரத்தை ஹேண்டில் செய்திருந்தார்.சஞ்சய் ராமசாமியை மறுபடியும் திரையில் பார்த்ததுபோல் இருந்தது.தற்போது ‘சீன்’ திரைப்படம்.’ஆவேஷம்’ படத்திற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.அந்தமாதிரி இருக்குமா? இந்தமாதிரி இருக்குமா? என்ற எதிர்பார்ப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டு புதுமாதிரியாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.டார்க் ஹியூமரில் ஒரு படத்தை வழங்கி இருக்கிறார்.’ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா..’ என்பதை டார்க் ஹியூமரில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அந்த அளவிற்கு இந்தப்படம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கிறது.அதிலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளியாவது சிறப்பு.
இந்தப்படத்தில் இசையமைப்பாளரான சுசின்ஷியாம் தனியாக கோவாவில் அமர்ந்து இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.சமூக ஊடகத்தில் எந்த தொடர்பும் இன்றி இருப்பதால் இவருக்கு ‘இசை சித்தர்’ என்ற அடைமொழியைக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் 16 பாடல்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
இயக்குநர் ஜித்து மாதவன் ஒரு இன்ட்ரோவெர்ட் என சொல்லலாம்.எப்போதும் அமைதியாகவே இருப்பார்.ஆனால் படத்தில் பட்டாசாக வெடித்திருக்கிறார்.
வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் எதை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.அதன்பிறகு அந்தப்பாதையில் கடினமாக உழைக்கவேண்டும்.வெற்றி உடனடியாகக் கிடைக்காது.சற்று காலதாமதம் ஆகும்.அதற்கு காலமும், ஆண்டவுடன் அருளும் துணை செய்யும்.அதன்பிறகு வெற்றி கிடைக்கும்.இரசிகர்கள் இருக்கும்வரை அண்ணா எப்போதும் உற்சாகமாக உழைத்து உழைத்து இன்னும் உயரத்துக்கு அனைவரையும் அழைத்துச் செல்வார்.
இரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் அண்ணாவைப் பற்றிய விசயத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.அண்ணாவை இவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள்.அண்ணாவை இன்ஸ்பிரேஷன் ஆக நிறைய பேர் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில்….
நாங்கள் எங்கள் குழு உடன் இங்கு வரும்போது எங்களுக்குள் துபாயில் சொதப்பியதைப் போல் இங்கு சொதப்பக்கூடாது. இங்கு அதைவிடக் கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் இப்படி பேசவேண்டும்.இதை பேசவேண்டும் என நிறைய பிளான் செய்தோம். கடைசியில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,என்னதான் பிளான் செய்தாலும் கடைசியில் சொதப்பத்தான் போகிறோம்.அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேரடியாக போய்விடுவோம் என முடிவு செய்தோம்.
ராஜ் பிரியன் எனக்கு மேடையில் பேசத்தெரியாது என்று சொல்லி,அரைமணி நேரம் பேசினார்.அவர் கவிஞரும் கூட.அந்த அளவிற்கு எனக்குப் பேசத்தெரியாது.
இந்தப்படத்தைப் பற்றி ஆன்லைனில் நிறைய செய்திகள் வெளியாகி இருக்கிறது.இந்தப்படத்திற்கு மூன்று டீசர்களை வெளியிட்டிருக்கிறோம்.ஒரு ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறோம்.இதைமட்டும் பாருங்கள்.இதில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ…! அதுதான் படம்.நவம்பர் ஆறாம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள்.தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றார் .
நடிகர் சூர்யா பேசுகையில்…..
இது ரொம்ப முக்கியமான மேடை.’சீன்: படத்தின் இசை வெளியீட்டு விழா.இந்தநேரத்தில் என்னுடைய முதல்படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு தேவா சார் இசையமைத்திருந்தார்.அவருக்கு இந்தமேடையில் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்.அவர் எப்போதும் எங்களுடைய நினைவில் இருப்பார்.அவர் போட்ட ‘அவள் வருவாளா..!’ என்ற ட்யூன்தான் இன்றுவரை என்னை அடையாளப்படுத்தி வருகிறது.நான் இவ்வளவு தூரம் பயணித்ததற்கு தேவா சார் தான் ஆரம்பப்புள்ளி.
இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து இங்கு வருகை தந்த இரசிகர்களாகிய நீங்கள்தான்.உங்களின் அன்புதான்.
திரையுலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டன.கொஞ்சம் கூட அன்பு குறையாமல் என் மீது பாசம் காட்டி வருகிறீர்கள். மேடையில் நிற்கவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நற்பணி மன்றம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? நாம் யார்? நாம் எப்படி இருக்கவேண்டும்? என்பதை மற்றவர்களுக்காக நாம் ஃப்ரூப் செய்ய வேண்டியதில்லை.’மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்து பேசவேண்டாம்’ என்று நான் சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,எப்போதும் அந்த பேரன்பைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்.
500 நன்கொடையாளர்கள் மூலம் இரத்ததானத்தைத் தொடங்கினோம்.இப்போது ஒவ்வொரு ஆண்டும் 5000 நன்கொடையாளர்கள் இரத்ததானத்தை வழங்குகிறார்கள்.
நாங்கள் ஏராளமான வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறோம்.அதில் டாக்டர்ஸ் இருக்கிறார்கள்.வக்கீல்கள் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்.இன்ஜினியர்கள் இருக்கிறார்கள்.அண்மையில் ஒரு தம்பிக்கு காலில் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை இருந்தது.இது தொடர்பாக டாக்டர்ஸ் குரூப்பில் ஒரு பதிவை பதிவிட்டோம்.உடனடியாக கட்டணம் இல்லாமல் அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.இவை அனைத்தும் ஒரே குடும்பம்.அது என் குடும்பம்.
நானும் ஜோவும் ஜித்துவின் ‘ரோமான்சம்’ படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்.அவருடைய ‘ஆவேஷம்: படமும் எனக்கு பிடித்திருந்தது.அவர் உருவாக்கும் உலகம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்தது.அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் வித்தியாசமானதாக இருக்கும்.
எனக்கு இந்தவருசம் மிகவும் ஸ்பெஷல் ஆனது.மூன்று படங்கள் வெளியாகிறது.இதற்குமுன் ‘மாயாவி’,’கஜினி’,’ஆறு’ என மூன்று படங்கள் வெளியானது என நினைக்கிறேன்.
‘கருப்பு’ 45 நிமிடங்களில் கதைகேட்டு நடிக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்துவந்தேன்.ஃபேமிலி ஓரியண்டட் படங்களில் நடிக்கவேண்டும் என நினைத்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் நடித்தேன்.அதுவும் உங்களுக்குப் பிடித்திருந்தது.அதேபோல் இந்தப்படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும்.
இசையமைப்பாளர் சுசின் ஷியாம் தமிழில் அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக திரையரங்கத்திற்கு வந்து,இந்தப்படத்தை சந்தோசமாகப் பாருங்கள்.
நடிகர் தனுஷ் ஒரு ‘ட்விட்’டில், ‘சூர்யாவின் படத்திற்காக என் படத்தினைத் தள்ளி வைக்கிறேன்’ என்று சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி.
வெற்றி குறித்து எனக்குள் ஒரு கேள்வி இருக்கிறது.என்ன செய்தால் வெற்றிபெற முடியும்? அதுமட்டும் போதுமா..!அதனால் வெற்றி பெறுவதும்…தோல்வி அடைவதும்…அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்ப்பதுதான்.
20 வயதில் ஒரு வேலை வேண்டும்.25 வயதில் என் அக்கவுண்டில் இவ்வளவு பணம் இருக்கவேண்டும்.30 வயதில் ஒரு வீடு வாங்கி விடவேண்டும்.50 வயதில் ஒரு பிரம்மாண்டமாக வீட்டை கட்டிடவேண்டும் என்ற ஆசை இயல்பாக இருக்கும்.நான் தற்போது 50 வயதை கடந்துவிட்டேன்.நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்றால்…மனதில் அமைதி வேண்டும் என விரும்புகிறேன்.அத்துடன் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.இந்த இரண்டுதான் அவசியம் என நினைக்கிறேன்.இந்த இரண்டும் இருந்தால் இவற்றில் எல்லாம் அடங்கிவிடும்.
என்னால் என் பெற்றோர்களை முடிவு செய்யமுடியாது.என் உடன் பிறந்த சகோதர,சகோதரிகளையும் முடிவு செய்யமுடியாது.நான் பிறந்துவிட்டேன்.ஆனால் மனைவி அமைவதெல்லாம் என்று சொல்வார்கள் இல்லையா..? அதேபோல் என்னை தற்போது கைபிடித்து முன்னால் அழைத்துச்செல்வது என் ஜோதிகாதான்.அதற்காக அவருக்கு நன்றி.
வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள்.வாழ்க்கை அழகானது.நாம் மூச்சுவிடும்வரை எல்லா விசயங்களும் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை தான்.எவை வேண்டுமானாலும் மாறலாம்.எவற்றை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம்.மூச்சுவிடும்வரை தோல்வி என்பது இல்லை.எதுவும் முடிவில்லை.எதுவும் பிரிவில்லை.எதுவும் உடைந்து போகவில்லை.எல்லாவற்றையும் சரிசெய்ய இயலும்
இவ்வாறு அவர் பேசினார்.











