October 30, 2026
விமர்சனம்

எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் – திரைப்பட விமர்சனம்

கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைப் பின்னணியாக வைத்துக்கொண்டு காதல்,பாசம்,விசுவாசம்,துரோகம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்.

நாயகன் சரண் சக்தியும் அவருடைய நண்பர் பாலசரவணனும் கடத்தல்காரர் ஜேடி.சக்ரவர்த்தியிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.ஒருகட்டத்தில் அவருக்குரிய பெரும் மதிப்பிலான பொருளை இவர்கள் எடுத்துவிடுகிறார்கள்.அதனால் ஜேடி.சக்ரவர்த்திக்குப் பெரும் சிக்கல்.அதனால் கொலைவெறியோடு கிளம்புகிறார்.இன்னொரு பக்கம்,நாயகன் காதலித்து திருமணம் செய்த நாயகி சிமேகாவுக்கும் சிக்கல்.இவற்றின் முடிவென்ன? என்பதை பரபரப்பாகச் சொல்லியிருக்கிறது படம்.

வறுமையில் வாடும் இளைஞன்,சட்டத்துக்குப் புறம்பான வேலைக்காரன்,காதலன்,காதல் கணவன் ஆகிய பல்வேறு வகைகளைக் கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நாயகன் சரண் சக்தி,எல்லா இடங்களிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிமேகா அழகாக இருக்கிறார்.அப்பாவியாக இருக்கிறார்.நாயகன் மீதான காதல்,அண்ணனை எதிர்த்து திருமணம்,மாமியாரோடு உரசல்,காதல் கணவன் செய்த தப்பால் ஏற்படும் சிக்கலை எதிர்கொள்ளும் விதம் ஆகியனவற்றில் இயல்பாக நடித்திருக்கிறார்.

பாலசரவணனின் கதாபாத்திர சுவையானது.அதை நன்றாகச் செய்திருக்கிறார்.நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவை இதேமாதிரியான கதாபாத்திரத்தில் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.அவற்றைப் போலவே இந்தப்படத்திலும் சிறப்பாக ந்டித்திருக்கிறார்.

எதிர்மறை வேடங்களில் ஜேடி.சக்ரவர்த்தி,லால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களால் அந்தக் கதாபாத்திரங்கள் பெரிதாகியிருக்கின்றன.

முகவராக நடித்திருக்கும் காளிவெங்கட்,சுங்கத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிஜ அதிகாரியும் படத்தின் இயக்குநருமான முரளி ஆகியோர் நடிப்பும் நன்று.

ஒளிப்பதிவாளர் கவின் பாஸ்கருக்கு நல்வாய்ப்பான கதைக்களம் அமைந்திருக்கிறது.அதில் தன் திறமையை நிறுவியிருக்கிறார்.பருந்துப் பார்வைக் காட்சிகள் கூடுதல் சிறப்பு.

சாம் டேனியல் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு வேகம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஸ்ரீ வத்சன்,திரைக்கதையில் இருக்கும் பல்வேறு திருப்பங்களையும் குழப்பமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.நிறைய கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையிலும் நூறு கிமீ வேகத்தில் வண்டியோட்டியிருக்கிறார்.

நிஜ சுங்கத்துறை அதிகாரியான சமயமுரளி,எழுதி இயக்கியிருக்கிறார்.அதனால்,அந்தத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்படியே பதிவாகி அதிர வைக்கின்றன.கொஞ்சம் பிசகினாலும் சுங்கத்துறை ஆவணப்படமோ என்கிற கேள்வி வந்துவிடக்கூடிய
அவ்வளவு உண்மைகளோடு பாசம்,நேசம்,காதல்,பணிவு,துணிவு,துரோகம் ஆகிய பல உணர்வுகளை உள்ளடக்கிய புனைவையும் இணைத்து பரபரவென ஓடும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

– குமரன்

Related Posts